November 12, 2026
தண்டோரா குழு
சிடிஆர்-ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026-ன் 2-வது சுற்றுப் போட்டிகள் கோவையில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நாளை மற்றும் நாளை மறுநாள் (14 மற்றும் 15) விறுவிறுப்பாக நடைபெற உள்ளன.
முதல் சுற்றில் மழைய குறுக்கீடுகள், கடைசி நேரத் திருப்பங்கள் என பல சுவாரஸ்யங்கள் அரங்கேறிய நிலையில், இந்த வார இறுதியில் மொத்தம் 18 பந்தயங்கள் நடைபெற உள்ளன. முதல் சுற்றில் வெற்றி பெற்றவர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், பின்தங்கியவர்கள் முன்னிலைக்கு வரவும் கடுமையாகப் போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 18 பந்தயங்கள் விறுவிறுப்பாக நடைபெற உள்ளன.எல்ஜிபி பார்முலா 4 மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்பிரிவின் முதல் சுற்றில் ஆர்யா சிங், துருவ் கோஸ்வாமி மற்றும் பாலபிரசாத் என மூன்று வெவ்வேறு வெற்றியாளர்கள் உருவானதால், இந்த சுற்றிலும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பை ‘அமெச்சூர்’ பிரிவில் வதோதராவைச் சேர்ந்த கபீர் சஹோச் மூன்று ரேஸ்களிலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறார்.
‘புரொபஷனல்’ பிரிவில் கோவையைச் சேர்ந்த செந்தில் குமார், நவ்நீத் குமார் மற்றும் பெங்களூருவின் அனிஷ் ஷெட்டி ஆகியோர் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். ஜேகே டயர் லெவிடாஸ் கோப்பை ‘ஜென்டில்மேன்’ பிரிவில் பிரதீக் சோனாவானே மற்றும் ‘ரூக்கி’ பிரிவில் ஆடம் ஜுனைத் ஆகியோர் தலா இரண்டு வெற்றிகளுடன் சிறப்பான நிலையில் உள்ளனர். ஜேகே டயர் நோவிஸ் கோப்பை மெக்கோ ரேசிங் அணியின் ஷத்வீர் ஷெட்டி இரண்டு ரேஸ்களிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் தொடர்கிறார்.
அவருக்குப் பின்னால் அகஸ்டின் பாபி மற்றும் ஆடம் ஜுனைத் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.சூப்பர் சலூன் தில்ஜித் டி.எஸ் (சூப்பர் ஸ்டாக்), அமன் நாக்தேவ் (இந்தியன் டூரிங் கார்ஸ்), மற்றும் தீபக் ரவிகுமார் (ஜூனியர் டூரிங்) ஆகியோர் தங்களது பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதே சமயம், இந்தியன் சூப்பர் டூரிங் கார்ஸ் பிரிவில் அர்ஜுன் நரேந்திரன் மற்றும் பைரன் பிதாவாலா தலா ஒரு வெற்றியைப் பகிர்ந்து கொண்டுள்ளதால் சாம்பியன் பட்டத்திற்கான போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று தெரிகிறது.