March 25, 2026
தண்டோரா குழு
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஸ்கிரீன் அகாடமி, ஏப்ரல் 5-ந்தேதி நடக்கவுள்ள சேடக் ஸ்கிரீன் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டின் சிறந்த இந்தி திரைப்படங்கள் மற்றும் ஓடிடியில் வெளியான திரைப்படங்களின் அடிப்படையில் மொத்தம் 31 பிரிவுகளில் இந்தப் பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதில் 24 பரிந்துரைகளுடன் ‘துரந்தர்’ திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 2 மற்றும் 3-ம் இடங்களை ‘சையாரா’ மற்றும் ‘ஹோம் பவுண்ட்’ திரைப்படங்கள் பிடித்துள்ளன.
ஆதித்யா தர் இயக்கிய ஸ்பை த்ரில்லர் படமான ‘துரந்தர்’ அதிகபட்சமாக 24 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.இதற்கு அடுத்தபடியாக, மோகித் சூரியின் ‘சையாரா’ 17 பரிந்துரைகளையும், நீரஜ் கய்வானின் ‘ஹோம் பவுண்ட்’ 15 பரிந்துரைகளையும் பெற்றுள்ளன. திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள் என இரண்டும் இதில் இடம் பெற்றுள்ளன.
கடந்த 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஸ்கிரீன் விருதுகள், ஸ்கிரீன் அகாடமியால் திறமையின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் லாப நோக்கமற்ற, 50-க்கும் மேற்பட்ட பிரபல திரைப்பட இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.நியாயமான முறையில் விருதுகளைத் தேர்வு செய்ய, அகாடமியில் உள்ள 95 சதவீதம் பேருக்கும் மேல் இந்த மதிப்பீட்டு முறையில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவுக்கும் சராசரியாக 38 முதல் 40 உறுப்பினர்கள் மதிப்பெண் அளித்து சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்தத் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்தவும் துல்லியமாக்கவும், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சினிமா மற்றும் ஊடகப் படிப்பின் தலைவர் பேராசிரியர் பிரியா ஜெயக்குமார், அகாடமி உறுப்பினர்களுக்காக ஒரு விரிவான மதிப்பெண் வழங்கும் முறையை உருவாக்கியுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக, ஒரு திரைப்பட விருது வழங்கும் விழா நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது. யூடியூப் உடனான சிறப்பு கூட்டணியின் மூலம், உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த ஸ்கிரீன் விருதுகளை பார்த்து மகிழலாம். இது தவிர, சோனி எண்டர்டெயின்மென்ட் டெலிவிஷன் மற்றும் சோனி லிவ் செயலியிலும் இந்த விழா நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது.