September 28, 2018
தண்டோரா குழு
கோவையில் தனியார் மருத்துவமனையில் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த துப்புரவு பணியாளரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை உக்கடம் சிஎம்சி காலணி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.இவர் முஸ்பூர் ரகுமான் என்பவர் நடத்தி வரும் மாஸ் ஹவுஸ் கீப்பிங் என்ற நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் நேற்று கோவில்பாளையம் பகுதியில் உள்ள ராஜா மருத்துவமனைக்கு வேலைக்கு மணிகண்டனை முஸ்பூர் ரகுமான் அனுப்பியுள்ளார்.
அங்கு தண்ணீர் தொட்டியில் இறங்கி மணிகண்டன் சுத்தம் செய்த போது,மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.இதையடுத்து மணிகண்டனின் உடல் உடல்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
மருத்துவமனையின் அஜாக்கிரதை காரணமாகவும்,உரிய பாதுகாப்பு உபகரணங்களை முஸ்பூர் ரகுமான் வழங்காததுமே உயிரிழப்பிற்கு காரணமென உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும்,மருத்துவமனை மீதும்,முஸ்பூர் ரகுமான் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும்,மணிகண்டன் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரியும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து கோவில்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.