September 28, 2018
தண்டோரா குழு
ஆன்லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.இதை தொடர்ந்து கோவையிலும் 3000 ஆயிரம் மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
ஆன்-லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க மத்திய அரசு கடந்த மாதம் வரைவு அறிக்கையை வெளியிட்டது.இதற்கு மருந்து வணிகர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆன்-லைன் மருந்து விற்பனை பொதுமக்களுக்கு ஆரோக்கியமற்றது என்றும்,டாக்டரின் பரிந்துரையில் மட்டுமே விற்க வேண்டிய மருந்துகள் தவறான பயன்பாட்டால் நமது சமுதாயத்தை சீரழித்து விடும் என்றும் மருந்து வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆன்-லைன் மருந்துகளின் ஆதிக்கம் அதிகமானால் கிராமப்புறம் மற்றும் சிறிய நகரங்களில் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பது அரிதாகிவிடும் என்றும் மருந்து வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.ஆன்-லைன் மருந்து வணிகம் நடைமுறைக்கு வந்தால்,மருந்து கடை தொழிலையே நம்பி இருக்கும் 8 லட்சம் பேர் நேரடியாகவும்,40 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும்,அவர்களுடைய குடும்பத்தினரும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும் என்று மருத்துவ வணிகர்கள் கூறியுள்ளனர்.
கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில் சுமார் 3000 கடைகள் இந்த கடையடைப்பில் பங்கேற்றுள்ளதாகவும்,இதனால் 15 கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் பாதிக்கப்படும் என கோவை மாவட்ட மருந்து வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.