April 17, 2026
தண்டோரா குழு
வாக்குரிமையின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, பொறுப்பான குடிமக்களாக உருவாக்கும் நோக்கில், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, கோயம்புத்தூர் மாநகராட்சி சுகாதாரத்துறை மற்றும் சி.டி.எம் ஹோம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து இன்று வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை சிறப்பாக நடத்தின.
இந்த பேரணியை ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜே.தினகர் தலைமையில், எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சி.வி. இராம்குமார்,தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார்,ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் எஸ்.ராஜகோபால்,மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.அழகப்பன் மற்றும் சி.டி.எம் ஹோம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் ஜீவரத்தினம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
காலை 9 மணியளவில் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து துவங்கிய பேரணி, நகரின் முக்கிய பகுதிகள் வழியாக வ.உ.சி பூங்கா வரை நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு கருத்துகளை வெளிப்படுத்தும் பலகைகள் ஏந்தி சென்றதுடன், முகஅலங்காரம் (Face Painting) மூலம் படைப்பாற்றலுடன் விழிப்புணர்வு செய்திகளை எடுத்துரைத்தனர்.மேலும், 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் அனைவரும் வாக்காளர் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.
இந்த பேரணி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்குப்பதிவின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது.