July 30, 2026
தண்டோரா குழு
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) சார்பில் மண்டலம் ‘பி’ (Zone B) அளவிலான 2026-ஆம் ஆண்டு தடகள விளையாட்டுப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றன.
கோவை ஜி.டி. பள்ளி நடத்திய இப்போட்டியில், மண்டலம் ‘பி’-யைச் சேர்ந்த 45 பள்ளிகளில் இருந்து சுமார் 700 மாணவ, மாணவிகள் பங்கேற்று பல்வேறு தடகளப் போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நடுவர்கள் போட்டிகளை சிறப்பாக நடத்தினர்.
இப்போட்டியில் செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 355 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் இணைந்து 60 தங்கம், 45 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 128 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
மேலும், போட்டித் தொடரில் 7 மாணவர்கள் மற்றும் 5 மாணவிகள் என மொத்தம் 12 பேர் புதிய போட்டிச் சாதனைகளை படைத்தனர். லோகமித்ரன் செல்வராஜ், தன்வந்த் ராஜா, கிருத்திக், சபரிஷ் பிரணவ் ராஜா, ரித்விக் ராகுல், வைஷ்ணவ் சர்வின் உள்ளிட்டோர் மாணவர்கள் பிரிவிலும், சிந்து வர்ஷினி, ஆராத்தியா, விவிதா சிவகுமார், பூர்விகா உள்ளிட்டோர் மாணவிகள் பிரிவிலும் புதிய சாதனைகளை பதிவு செய்தனர்.
நிறைவு விழாவில்,ஜி.டி.பள்ளியின் முன்னாள் மாணவரும்,தொடர்ந்து நான்கு முறை இந்திய தேசிய டூரிங் கார் சாம்பியன் பட்டம் வென்ற பிரபல ரேஸ் வீரருமான அர்ஜுன் நரேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் சரோ தன்ராஜன், தாளாளர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மனமார வாழ்த்தினர்.