September 13, 2026
தண்டோரா குழு
கியூப் சினிமா மற்றும் கற்பகம் கிராண்ட்பிளக்ஸ் இணைந்து, கோயம்புத்தூரில் ‘Epic’ மற்றும் ‘Epic Luxon’ என்ற இரண்டு பிரீமியம் சினிமா அனுபவங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
இதன் மூலம் தமிழ்நாட்டின் முதல் Epic Luxon திரையும், கியூப் சினிமாவின் 14வது Epic திரையும் கோவையில் அறிமுகமாகின்றன.
குறிப்பாக, Epic Luxon அரங்கில் அமைக்கப்பட்டுள்ள LED சினிமா திரை இந்தியாவின் மிகப்பெரிய LED சினிமா திரை என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
Epic அரங்கில் 4K RGB லேசர் புரொஜெக்ஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேம்பட்ட பிரகாசம், நிறத்துல்லியம் மற்றும் அதிக கான்ட்ராஸ்ட் மூலம் பெரிய திரையில் திரைப்படங்களை சிறப்பான காட்சி அனுபவத்துடன் பார்க்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், Epic Luxon அரங்கில் பாரம்பரிய புரொஜெக்ஷனுக்கு பதிலாக LED சினிமா தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆழமான கருப்பு, அதிக கான்ட்ராஸ்ட், பிரகாசமான நிறங்கள் மற்றும் திரை முழுவதும் சீரான படத்தரம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஒலி திரையை ஊடுருவிச் செல்லும் வகையில் சிறப்பு LED திரை அமைக்கப்பட்டுள்ளதால், திரைக்குப் பின்னால் ஒலிபெருக்கிகளை அமைத்து பார்வையாளர்களுக்கு ஆழமான ஒலி அனுபவத்தை வழங்க முடியும்.
இரண்டு அரங்குகளிலும் Dolby Atmos உடன் கூடிய MAC Audio ஒலி அமைப்பு இடம்பெற்றுள்ளது.
பிரதிபலிப்புகளை குறைக்கும் வகையில் முழுமையான கருப்பு நிற உட்புற வடிவமைப்பும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூப் சினிமா CEO ஹர்ஷ் ரோஹத்கி கூறுகையில்,
கோயம்புத்தூர் பார்வையாளர்களுக்கு உயர்தர படம் மற்றும் ஒலியை மையமாகக் கொண்ட இரண்டு விதமான பிரீமியம் சினிமா அனுபவங்களை வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
கற்பகம் குழும திரையரங்குகளின் நிர்வாக இயக்குநர் என். சிவபிரகாசம், இந்தியாவின் மிகப்பெரிய LED சினிமா திரையையும், தமிழ்நாட்டின் முதல் Epic Luxon அனுபவத்தையும் கோயம்புத்தூருக்கு கொண்டு வருவதில் பெருமை கொள்வதாக தெரிவித்தார்.
கோவையின் சினிமா ரசிகர்களுக்கு, தொழில்நுட்பத்தில் புதிய உச்சத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியாக இந்த Epic மற்றும் Epic Luxon அரங்குகள் அமைந்துள்ளன.