July 6, 2026
தண்டோரா குழு
கோவையில் சீட்டு பணமாக ரூ.58.54 லட்சத்தை பெற்றுக்கொண்டு, மாதாந்திர தவணைகளை செலுத்தாமல் ஏமாற்றியதாக திமுக வார்டு கவுன்சிலர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் வேடப்பட்டியைச் சேர்ந்த பிரதிப்ராஜன் (37),அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்காக மட்டுமே ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக தெரிவித்தார்.
அப்போது, வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த திமுக வார்டு கவுன்சிலர் அன்னக்கிளி, தன்னையும் சீட்டில் இணைத்துக் கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தியதாகவும், ஆரம்பத்தில் மறுத்த போதிலும், அவர் பகுதி கவுன்சிலர் என்பதால் 2021-ஆம் ஆண்டு குழுவில் இணைத்ததாகவும் கூறினார்.
பின்னர் அன்னக்கிளியின் கணவர் சந்திரகுமார் மற்றும் மகன்கள் வெங்கடேஷ் பிரசாத், பிரனேஷ் ஆகியோரும் பல்வேறு குழுக்களில் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டதாகவும், அவர்களது ஒப்புதலின் பேரில் ஒவ்வொரு குழுவிலும் தலா 10 சீட்டுகள் என மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சீட்டுகளில் சேர்ந்ததாகவும் தெரிவித்தார்.
சீட்டு தொகையை பலமுறை பெற்றுக்கொண்ட அவர்கள், அதற்கான மாதாந்திர தவணைகளை முறையாக செலுத்தாமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதாகவும், தற்போது ரூ.58,54,815 பாக்கி நிலுவையில் உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், கட்சியின் பெயரை பயன்படுத்தி வழக்குப் பதிவு செய்யாமல் தங்களை மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, நிலுவைத் தொகையை மீட்டுத் தர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளதாக கூறினார்.