April 14, 2026
தண்டோரா குழு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்வள மேலாண்மையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சிறுதுளி, நொய்யல் நதி மற்றும் அதனை சார்ந்த நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வெல்லியங்கிரி மலை பகுதியில் தோன்றி சுமார் 170 கி.மீ. நீளத்தில் பாயும் நொய்யல் நதி, கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலைக்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது.
மாசுபாடு,ஆக்கிரமிப்பு மற்றும் நீரோட்டக் குறைவு போன்ற சவால்கள் காரணமாக பாதிக்கப்பட்ட நொய்யல் நதியை மீட்டெடுக்க கடந்த 23 ஆண்டுகளாக சிறுதுளி ஒருங்கிணைந்த அணுகுமுறையில் செயல்பட்டு வருகிறது.நதி,நீரோடைகள், தடுப்பணைகள் மற்றும் பாசன வாய்க்கால்களை இணைத்து புனரமைக்கும் இந்த முயற்சிகள் மூலம் சாடிவயல், மசோரம்பு நீரோடை, முண்டந்துறை, புதுக்காடு மற்றும் குனியமுத்தூர் அணைகள் உள்ளிட்ட பல இடங்களில் நீர் சேமிப்பு திறன் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் மேம்பட்டு, ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் “நொய்யல் ஆற்றில் நடைபயணம்” நிகழ்ச்சி பேரூர் படித்துறை முதல் குறிச்சி அணைக்கட்டு வரை நடைபெற்றது. இதில் வனிதா மோகன், நிர்வாக அறங்காவலர்,சிறுதுளி,பேரூர் ஆதீனம்,நீர்வளத்துறை, தொழில்துறையினர் கொடிசியா,சேம்பர் ஆஃப் காமர்ஸ், சீமா , யங் இந்தியன்ஸ்,விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய வனிதா மோகன் கூறுகையில்,
“நொய்யல் நதி கொங்கு மண்டலத்தின் உயிர்நாடி.அதை பாதுகாப்பதும், புனரமைப்பதும் அரசு மட்டும் செய்ய வேண்டிய பணி அல்ல;பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட்டால்தான் நீடித்த மாற்றத்தை உருவாக்க முடியும்” என்றார்.
மேலும், “நல்லதண்ணி” திட்டத்தின் மூலம் இயற்கை அடிப்படையிலான முறைகள் பயன்படுத்தி நீர் தரத்தை மேம்படுத்தும் பணிகள் கோவையின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெட்டிவேர், தாவரங்கள் மற்றும் உயிரியல் வடிகட்டல் முறைகள் மூலம் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு நீர்நிலைகளில் சேர்க்கப்படுகிறது. நாளொன்றுக்கு உருவாகும் அதிகளவான கழிவுநீரை கட்டுப்படுத்தி, நதிகளில் மாசுபாட்டை குறைப்பதில் இத்திட்டம் முக்கிய பங்காற்றுகிறது.
முக்கிய அம்சங்கள்:
1. 100 மில்லியன் லிட்டர் மேற்பட்ட நீர் சேமிப்பு திறன் உருவாக்கம்
2. 3,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறும் பாசன மேம்பாடு
3. நிலத்தடி நீர் மட்டம் உயர்வு மற்றும் நீர்வள பாதுகாப்பு
நொய்யல் நதியை பாதுகாக்க பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் என சிறுதுளி அழைப்பு விடுத்துள்ளது.