• Download mobile app
24 May 2026, SundayEdition - 3756
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈஷாவின் ‘சயின்ஸ் ஸ்பார்க்’: கிராமப்புற மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் புதிய திட்டம் – ஓராண்டு நிறைவு விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி மகேஷ் நாராயணன் பங்கேற்பு

May 24, 2026 தண்டோரா குழு

ஈஷா அவுட்ரீச் சார்பில் கிராமப்புற மாணவர்களுக்காக துவங்கப்பட்ட “ஈஷா சயின்ஸ் ஸ்பார்க்” (அறிவியல் தீப்பொறி) திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழா மற்றும் அறிவியல் கண்காட்சி, கடந்த சனிக்கிழமை அன்று, கோவையில் உள்ள செம்மேடு ஈஷா இயற்கை விவசாய வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஈஷா சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

கிராமப்புற குழந்தைகளுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தைத் தூண்டி, அவர்களை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுத் துறைகள் சார்ந்த உயர் படிப்புகளை நோக்கி வழிநடத்தும் வகையில் இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது. இதில் ஈஷாவைச் சுற்றியுள்ள கிராமப்புற மற்றும் பழங்குடியின மாணவர்கள் பங்கேற்றுப் பயனடைந்தனர்.

கடந்த ஓராண்டாக நடைபெற்ற இந்த “ஈஷா சயின்ஸ் ஸ்பார்க்” பயிற்சியில் மாணவர்களுக்கு பல்வேறு அறிவியல் துறைகள் குறித்து சுவாரசியமான நவீனக் கற்றல் முறைகள் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. குறிப்பாக, காணொலி காட்சிப்படுத்துதல், செயல்முறை சோதனைகள், நேரடி களப்பயணங்கள், அறிவியல் கல்வி சார்ந்த திரைப்படங்கள், விளையாட்டு வழிக் கற்றல், வினாடி-வினா போட்டிகள் மற்றும் அறிவியல் விளக்கப்படங்கள் தயாரித்தல் போன்ற பன்முகத் தன்மைகொண்ட செயல்பாடுகள் மூலம் வகுப்புகள் நடைபெற்றன.

இந்தப் பயிற்சியில் இயற்பியல், நுண்ணுயிரியல், வானவியல், மண் அறிவியல், கடல் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் துறைகள் குறித்த வகுப்புகள் செயல்முறை விளக்கங்களுடன் நடைபெற்றன. குறிப்பாக, ஈஷாவின் மண் ஆய்வுக்கூடத்திற்கு நேரடியாகச் சென்று மண் பரிசோதனை முறைகளை நேரில் பார்வையிட்டு அறிந்துகொள்ளுதல் மற்றும் ரத்தினம் கல்லூரியின் அதிநவீன ஆய்வகத்திற்குச் சென்று நவீனக் கருவிகள் மூலம் நுண்ணுயிரிகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ளுதல் ஆகிய வாய்ப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், பள்ளிப் படிப்பு முடித்த பின்பு எந்தெந்த அறிவியல் துறைகளில் என்னென்ன வேலைவாய்ப்புகள் இருக்கின்றன என்பது குறித்தும் மாணவர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

இதன் ஓராண்டு நிறைவு விழாவில் இஸ்ரோ (ISRO) திரவ இயக்கத் திட்ட மையத்தின் ஓய்வு பெற்ற குரூப் ஹெட் மற்றும் விண்வெளி விஞ்ஞானி மகேஷ் நாராயணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசுகையில், “மாணவர்கள் தங்களின் பள்ளிப் பருவத்திலிருந்தே கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் அதிக கவனம் செலுத்தி, புதுமையான செயல்முறைத் திட்டங்களை உருவாக்கப் பழக வேண்டும். குறிப்பாக பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகும், இளங்கலை பொறியியல் படிப்பிற்கு பிறகும் குறிப்பிட்ட சில நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதன் மூலம் இஸ்ரோவில் பணியாற்றிக் கொண்டே உயர்கல்வியை மேற்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன.” எனப் பேசினார்.

தொடர்ந்து, இவ்விழாவில் பங்கேற்ற ரத்தினம் கல்விக்குழுமத்தின் டாக்டர் மாணிக்கம் ராமசாமி அவர்கள் பேசுகையில், “ஈஷா சயின்ஸ் ஸ்பார்க் திட்டம் கிராமப்புறக் குழந்தைகளுக்குக் கிடைத்துள்ள ஒரு மிக அற்புதமான நல்வாய்ப்பாகும். இந்த ஓராண்டு சயின்ஸ் ஸ்பார்க் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள மாணவ-மாணவிகள் எங்களது ரத்தினம் கல்லூரியில் உயர்கல்வி சேர வரும்போது, அவர்களுக்கு அறிவியல் பாடப்பிரிவுகளில் முற்றிலும் இலவசமாகவே சேர்க்கை வழங்கிட நாங்கள் முழு மனதுடன் தயாராக இருக்கிறோம்” எனக் கூறினார்.

ஈஷா வித்யா மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர் திருமறை சாவித்திரி ஆனந்த் அவர்கள் வாழ்த்துரை வழங்குகையில், “பொதுவாக, அறிவியலை வெறும் தியரியாகப் படிக்காமல் செயல்முறை அறிவோடு கற்றுக்கொள்வது என்பது நகர்ப்புறக் குழந்தைகளுக்குக் கிடைப்பதே ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால், ஈஷா அவுட்ரீச் அமைப்பு எந்தவிதக் கட்டணமும் இல்லாமல், கிராமப்புறங்களில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு இத்தகைய உலகத்தரம் வாய்ந்த செயல்முறை அறிவியல் கல்வியைக் கொண்டு சேர்த்திருப்பது சாதாரண விஷயமல்ல. இது இந்தக் குழந்தைகளுக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய வரப் பிரசாதம். சத்குரு அவர்களின் வழிகாட்டுதலும், ஈஷா அவுட்ரீச் குழுவினரின் அர்ப்பணிப்புமே இதற்கு மிக முக்கியக் காரணம். அடுத்த கல்வியாண்டில் இந்த திட்டத்தில் மேலும் கூடுதலான கிராமப்புற மாணவர்களை இணைத்து, இதன் பயன் பலரையும் சென்றடைய எங்களது பள்ளி நிர்வாகத்தின் சார்பாக முழு ஒத்துழைப்பையும், முயற்சிகளையும் மேற்கொள்வோம்” என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, இவ்விழாவிற்கு ஈஷா ஊரக மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி சிதாகாசா வரவேற்புரை ஆற்றினார் ஈஷா சயின்ஸ் ஸ்பார்க் திட்டத்தின் ஆசிரியரும் நுண்ணுயிரியலாளருமான சரவணகுமார் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார். ஓராண்டுப் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்குச் சிறப்பு விருந்தினர்களால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் நிறைவாக, விப்ரோ நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளரும், அண்டவியலில் ஆராய்ச்சியாளருமான காஞ்சனா முனிரத்தினம் நன்றியுரை ஆற்றினார்.

மேலும் படிக்க