October 1, 2026
தண்டோரா குழு
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மகேந்திரகிரியில் செயல்படும் விண்வெளி உந்துவிசை வளாகமும், கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து, உலக விண்வெளி வாரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அக்டோபர் 5 முதல் 7-ம் தேதி வரை மூன்று நாள் விண்வெளிக் கண்காட்சியை நடத்துகின்றன.
இந்தியாவின் விண்வெளிச் சாதனைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் விண்வெளித் திட்டங்கள் குறித்த மாதிரிகள், காட்சிப் படைப்புகள் மற்றும் காணொளிகள் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. இஸ்ரோ வல்லுநர்கள் மனித விண்வெளிப் பயணம், ஏவுகலத் தொழில்நுட்பம், உந்துவிசை அமைப்புகள், விண்வெளிப் பயன்பாடுகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளித் துறையில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து சிறப்பு உரைகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்துகின்றனர்.
மேலும்,மாணவர்களுக்கான ஓவியம், பேச்சு மற்றும் வினாடி வினா போட்டிகளுடன், தொலைநோக்கி மூலம் வான்நோக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இக்கண்காட்சியைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாகப் பார்வையிடலாம். இக்கண்காட்சி கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.