September 16, 2026
தண்டோரா குழு
செப்டம்பர் 1 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், தங்களது கோயம்புத்தூர் திட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஜி ஸ்கொயர் நிறுவனம் திட்டவட்டமாக மறுக்கிறது.
இத்திட்டத்திற்குள் 99 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு மாறானது. மேலும், இக்குற்றச்சாட்டு வருவாய்த்துறை ஆவணங்களுக்கு முரணான ஒன்றாகும்.இப்பகுதியில் உள்ள மொத்த நிலத்தின் பரப்பளவு சுமார் 722 ஏக்கர் ஆகும். இதில் 406.81 ஏக்கர் நிலமானது டிடிசிபியின் முறையான அனுமதி பெற்ற வீட்டுமனைத் திட்டத்தை உள்ளடக்கியுள்ளது.
மேலும்,இந்த மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் நகர் ஊரமைப்பு இயக்ககம், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்,உள்ளாட்சி அமைப்புகள், சுற்றுச்சூழல் துறை அனுமதிகள் , வனத்துறை மற்றும் பிற தொடர்புடைய அனைத்து சட்டப்பூர்வ அதிகார அமைப்புகளிடமும் உரிய முன் அனுமதிகள் மற்றும் ஒப்புதல்களைப் பெற்று மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அங்கீகரிக்கப்பட்ட 406.81 ஏக்கர் நிலத்தில், பூங்காக்கள்,சாலைகள், திறந்தவெளி பகுதிகளுக்கான ஒதுக்கீடு,மேற்கு புறவழிச்சாலை மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தேவைகள் உள்ளிட்ட பொதுப் பயன்பாடுகளுக்காகச் சுமார் 118 ஏக்கர் நிலத்தை ராக்கின்டோ நிறுவனம் தானமாக வழங்கியுள்ளது.மனைப்பிரிவு திட்டத்திற்கு வெளியே உள்ள சுமார் 300 ஏக்கர் நிலம் தரிசு நிலமாகப் பயன்பாடின்றி காலியாக வைக்கப்பட்டுள்ளது.இந்த 300 ஏக்கரில், மேற்கு புறவழிச்சாலை திட்டத்திற்காக 4.0652 ஏக்கர் நிலத்தை ராக்கின்டோ நிறுவனமும் திருக்கோயில் அமைப்பதற்காகத் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 19.62 ஏக்கர் நிலத்தை ஜி ஸ்கொயர் நிறுவனமும் தானமாக வழங்கியுள்ளன.
திட்டப் பகுதிக்கு உட்பட்ட நிலங்களுக்கு இடையே அமைந்துள்ள நீர்நிலைகள் (வாரி, குட்டை) மற்றும் வண்டிப்பாதைகள் ஆகியவை ஒன்றோடொன்று தொடர்பில்லாதவை என்றும், இவை அனைத்தும் சேர்ந்து மொத்தமாகச் சுமார் 50.05 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது என்றும் ஜி ஸ்கொயர் நிறுவனம் மேலும் தெளிவுபடுத்துகிறது. இந்த நிலமானது அருகிலுள்ள கிராமங்களைச் சுற்றியுள்ள மக்கள் தங்களது விவசாய நிலங்களுக்குச் சென்று விவசாயம் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அருகிலுள்ள மலைக் கோயிலுக்குச் செல்வதற்கும் பொதுப் பாதையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பகுதிகளை ஜி ஸ்கொயர் நிறுவனம் ஒருபோதும் ஆக்கிரமிக்கவில்லை.மாறாக, இந்நிறுவனம் தனது சொந்த செலவு மற்றும் முயற்சியில் சாலைகளைப் பராமரித்தும், நீர்நிலைகள் மற்றும் குட்டைகளைத் தூர்வாரியும், அதன் இயல்பான பயன்பாட்டு நிலையிலேயே தொடர்ந்து பாதுகாத்தும் வருகிறது.ஜி ஸ்கொயர் நிறுவனம் தனது ஆவணங்களின் உண்மைத்தன்மையில் மிக உறுதியாக உள்ளது. நிலத்தின் உரிமை, பரப்பளவு மற்றும் வகைப்பாடு ஆகியவற்றை பட்டா, புல வரைபடம் , ‘அ’ பதிவேடு, வில்லங்கச் சான்றிதழ் மற்றும் வருவாய்த்துறை ஆவணங்கள் வாயிலாக யார் வேண்டுமானாலும் சரிபார்த்துக் கொள்வதை நிறுவனம் வரவேற்கிறது.
இத்தகவல்களைத் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான ‘தமிழ் நிலம் – ஜிஐ வியூவர்’ இ-சர்வீசஸ் மற்றும் டிஎன் ரெஜிநெட் ஆகியவற்றின் மூலம் வெளிப்படையாக உறுதிசெய்து கொள்ளலாம்.