August 27, 2026
தண்டோரா குழு
கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் மாணவர் பேரவை தொடக்க விழா,இன்று (ஆகஸ்ட் 27) காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள தனலட்சுமி அம்மாள் பன்னோக்கு அரங்கில் நடைபெற்றது.
விழாவில் வீத லீடர்ஸ் அமைப்பின் தலைமைத் தொண்டரும்,முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே.அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசுகையில்,
இன்றைய தலைமுறை இளைஞர்கள் வேகமான மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். இன்று பொறுப்பேற்றுக் கொள்ளும் மாணவர்கள் தலைவர்கள் மட்டுமல்ல; கல்லூரியின் ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தின் பிரதிநிதிகள் என்ற பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார். கல்லூரிக் காலத்தில் மாணவர் தலைவர்களாக இருந்த பலர், பின்னாளில் சிறந்த சமூகத் தலைவர்களாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும்,இளைஞர்களிடையே ஏற்படும் மனஅழுத்தம்,வேலைவாய்ப்பின்மை, புறக்கணிப்பு உள்ளிட்ட காரணிகள் அவர்களை போதைப்பொருள் கலாச்சாரத்தை நோக்கி நகர்த்துவதாகத் தெரிவித்தார். எனவே, போதைப்பொருள் ஒழிப்பில் கவனம் செலுத்துவதுடன், மாணவர்களை போதைப் பழக்கத்திற்கு தூண்டும் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
விழாவிற்கு கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் C.A. வாசுகி தலைமை வகித்தார். கல்லூரி மேலாண்மைக்குழு பொருளாளர் மருத்துவர் O.N. பரமசிவன் முன்னிலை வகித்தார். முன்னதாக, கல்லூரி முதல்வர் முனைவர் வே. சங்கீதா வரவேற்புரையாற்றினார்.
மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர் தலைவர், செயலர், துணைத்தலைவர், இணைச்செயலர் மற்றும் விளையாட்டுத்துறைச் செயலர்கள் ஆகியோருக்கு, அவர்களின் பெயர் மற்றும் பதவி பொறிக்கப்பட்ட வில்லைகளை சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
தொடர்ந்து, போதைப்பொருள் தவிர்ப்பு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபடாமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தேசப்பற்று ஆகியவற்றை வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
விழாவின் நிறைவில், மாணவர் பேரவைத் தலைவரும் முதுஅறிவியல் கணிதம் இரண்டாம் ஆண்டு மாணவியுமான செல்வி B. சந்தியா நன்றியுரையாற்றினார்.