August 27, 2026
தண்டோரா குழு
தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனமான சன் டிவி நெட்வொர்க், தனது பிரத்யேக மைக்ரோ-டிராமா தளமான சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ்-ஐ அறிமுகப்படுத்தியது.
பிராந்திய டிஜிட்டல் பொழுதுபோக்கு உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் இந்த முயற்சி, தற்போதுள்ள சன் நெக்ஸ்ட் தளத்துடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட அம்சமாக செயல்படுகிறது.இதன் மூலம் பயனர்கள் தனியாக வேறு செயலிக்குச் செல்லாமல், சன் நெக்ஸ்ட் செயலிக்குள்ளேயே ஒருங்கிணைந்த பார்வை அனுபவத்தை பெற முடியும். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள பார்வையாளர்களின் மாறிவரும் உள்ளடக்க நுகர்வு பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப, சுருக்கமான மற்றும் ஈர்க்கக்கூடிய கதையம்சங்களை வழங்கும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிமுகத்தின் மூலம், வேகமாக வளர்ந்து வரும் மைக்ரோ-என்டர்டெயின்மென்ட் பிரிவில் சன் நெக்ஸ்ட் தனது முக்கியமான மூலோபாய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. உலகம் முழுவதும் டிஜிட்டல் தலைமுறை பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த வடிவம், சில நிமிடங்களிலேயே ரசிக்கக்கூடிய ஆழமான மற்றும் விறுவிறுப்பான கதைகளைக் கொண்டது.
சன் டிவி நெட்வொர்க்கின் பல தசாப்த கால பிராந்திய கதை சொல்லும் அனுபவத்தையும், புதிய தலைமுறை குறுவடிவ உள்ளடக்க அணுகுமுறையையும் இணைக்கும் சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ், தென்னிந்திய பார்வையாளர்களின் தனித்துவமான கலாச்சார அடையாளங்களை பிரதிபலிக்கும் கதைகளையே கதைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த தளத்தில் பிரத்யேக ஒரிஜினல் தொடர்கள், சர்வதேச டப்பிங் செய்யப்பட்ட குறுந்தொடர்கள், வெற்றிப்படங்கள் மற்றும் சன் நெக்ஸ்ட் நூலகத்தில் உள்ள ரசிகர்கள் விரும்பும் சன் டிவி தொடர்கள் இடம்பெறுகின்றன. இவை அனைத்தும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வேகமான குறுவடிவ எபிசோட்களாக மறுசீரமைக்கப்பட்டு,புதிய வடிவமைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்களையும் தொடர்களையும் முற்றிலும் புதிய டிஜிட்டல் அனுபவத்தில் ரசிக்க முடியும்.
இந்த அறிமுகம் குறித்து சன் டிவி நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநர் காவ்யா மாறன் கூறுகையில்,
“தென்னிந்தியாவில் உள்ளடக்கங்களை ரசிக்கும் விதம் வேகமாக மாறிவருகிறது. பார்வையாளர்கள் இன்று அதிகமான திரைகளில், குறுகிய நேரங்களில், தங்களுக்குப் பிடித்த உள்ளடக்கங்களை எளிதாக அணுக விரும்புகின்றனர். இந்த மாற்றத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ். 65,000 மணிநேரத்திற்கும் அதிகமான உள்ளடக்கங்கள், பல ஆண்டுகளாக உருவாக்கிய கதை சொல்லும் அனுபவம் மற்றும் வலுவான விநியோக வலையமைப்பு ஆகியவை எங்களின் மிகப்பெரிய பலமாக உள்ளன.
இந்த வலிமைகளை புதிய தலைமுறை பார்வையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதுமையான வடிவில் வழங்குவதே எங்களின் நோக்கம்.” என்றார்.”