• Download mobile app
06 Jul 2026, MondayEdition - 3799
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் பரபரப்பு: மாவட்ட ஆட்சியருக்கு ரூ.62 ஆயிரம் அபராதம்

July 6, 2026 தண்டோரா குழு

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் புதிய அரசு வழக்கறிஞர்களுக்கான நியமன உத்தரவுகள் இன்னும் வழங்கப்படாததால் வழக்கு விசாரணைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட எட்டு வழக்குகளில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், கோவை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் சார்பில் மாநில அரசுக்கு மொத்தம் ரூ.62 ஆயிரம் வழக்கு செலவு மற்றும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றிய அரசு வழக்கறிஞர்களின் பதவிக்காலம் கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. புதியதாக 24 அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவுகள் வழங்கப்படாததால் அவர்கள் இன்னும் பொறுப்பேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல வழக்குகளின் விசாரணைகள் தாமதமடைந்து வருகின்றன.
இன்று 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த கருமத்தம்பட்டி கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.அரசு தரப்பு சாட்சியளிக்க கேரளாவில் இருந்து மருத்துவர் ஒருவர் நீதிமன்றத்திற்கு வந்திருந்த நிலையில்,கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆஜராகாததால் சாட்சியிடம் விசாரணை நடத்த முடியவில்லை.

இதையடுத்து அரசு தரப்பின் அலட்சியத்தால் வழக்கை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதி சிவக்குமார்,மாவட்ட ஆட்சியர் சார்பில் ரூ.10 ஆயிரத்தை ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் செலுத்தவும், அந்தத் தொகையை மருத்துவரின் பயணச் செலவாக வழங்கவும் உத்தரவிட்டார்.
இதேபோல்,பந்தயசாலை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில், திருவாரூரில் இருந்து உதவி ஆய்வாளர் ஒருவர் சாட்சியளிக்க வந்திருந்தார். குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நிலையில்,அரசு வழக்கறிஞர் இல்லாததால் விசாரணை நடைபெறவில்லை.

இதனால் தேவையின்றி நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்ட குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் தலா ரூ.1,000 வீதமும், உதவி ஆய்வாளருக்கு ரூ.4,000-மும் இழப்பீடாக வழங்க மாநில அரசு ரூ.9,000-ஐ ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.இவ்வாறு இன்று விசாரணைக்கு வந்த மொத்தம் எட்டு வழக்குகளில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாததன் காரணமாக, கோவை மாவட்ட ஆட்சியர் சார்பில் மாநில அரசுக்கு மொத்தம் ரூ.62 ஆயிரம் அபராதம் மற்றும் வழக்கு செலவுத் தொகை விதித்து 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.

மாவட்டம் முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம், நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் வழக்கு விசாரணைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க