June 7, 2026
தண்டோரா குழு
மண்ணையும் மக்களையும் காக்கும் பணியில் கடலூர் ஈஷா நர்சரி செயல்பட்டு வருவதாக வீட்டுவசதித்துறை அமைச்சர் பி. ராஜ்குமார் பாராட்டு தெரிவித்தார்.
சத்குருவின் ‘மண் காப்போம் – காவேரி கூக்குரல்’ இயக்கம் மூலம் இந்தாண்டு (2026-27) 1.2 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இதன் துவக்க விழா இன்று (06/06/2026) கடலூர் அருகே அமைந்துள்ள ஈஷா காவேரி கூக்குரல் நர்சரியில் நடைபெற்றது.
காவேரி கூக்குரல் இயக்கத்தின் 1.20 கோடி எனும் நடப்பாண்டு இலக்கை எட்டும் வகையில், மாவட்டவாரியாகவும் இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 4.75 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா சின்னக்கட்டுசாகை ஈஷா உற்பத்தி நாற்றுப்பண்ணை வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பி. ராஜ்குமார், மாவட்ட வன அலுவலர் குருசுவாமி IFS ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு, கடலூர் மாவட்டத்திற்கான மரம் நடும் பணிகளைத் துவக்கி வைத்தனர்.
இவ்விழாவில் அமைச்சர் ராஜ்குமார் பேசுகையில்,
“சத்குருவின் தலைமையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு காவேரி கூக்குரல் திட்டத்தைத் தொடங்கினார்கள்.‘இது சாத்தியமா? அரசாங்கத்தாலேயே முடியவில்லை, இவர்களுக்கு எப்படி சாத்தியம்?’ என்று நினைத்தேன். ஆனால், இப்போது அது சாத்தியமாகி வருவதைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
உலக மக்களின் நல்வாழ்விற்காகச் சத்குரு மோட்டார் சைக்கிளிலேயே உலகெங்கும் பயணித்து, மண் வளம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இந்த மண்ணையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு பயணிக்கும் இந்த நர்சரிக்கும், இங்கே பணிபுரிகின்ற விவசாயத் தோழர்களுக்கும், பெண்களுக்கும் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், என்னிடம் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ‘எந்தவொரு ஊழலும் இருக்கக் கூடாது, மக்களுக்கு நன்மை மட்டுமே செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு செயல்பட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். ஆகையால், இந்த மாவட்டத்தினுடைய அமைச்சர் என்ற முறையிலே, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு என்னென்ன தேவையோ, அத்தனையையும் செய்யத் தயாராக இருக்கிறேன்.” எனக் கூறினார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் நேற்று 140-க்கும் மேற்பட்ட இடங்களில் இதன் துவக்க விழாக்கள் நடைபெற்றன. இதில் 1,00,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டு, மொத்தம் 317 ஏக்கர் பரப்பளவில் மரம் சார்ந்த விவசாயம் மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட்டன. இவ்விழாக்களில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
‘பருவநிலைக்காக, நமது எதிர்காலத்திற்காக இயற்கையிலிருந்து உத்வேகம் பெறுவோம்’ என்ற ஐநா-வின் இந்த ஆண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தின கருப்பொருளை மையமாகக் கொண்டு, இந்த மாபெரும் மரம் நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சத்குருவின் வழிகாட்டுதலில் காவேரி கூக்குரல் இயக்கம் தொடங்கப்பட்டது. காவேரி நதியைப் புத்துயிர் பெறச் செய்வதோடு, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில், காவேரி வடிநிலப் பகுதிகளில் மரம் சார்ந்த விவசாயத்தை இவ்வியக்கம் ஊக்குவித்து வருகிறது. இதன் மூலம் 13.4 கோடி மரங்கள் நடவு செய்யப்பட்டு, 2.6 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாறியுள்ளனர். மேலும் இவ்வியக்கம், ஐநாவின் பாலைவனமாதலைத் தடுக்கும் அமைப்பு (UNCCD) மற்றும் ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தால் (UNEP) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மரம் சார்ந்த விவசாயத்தில், பயிர்களுடன் பொருளாதார மதிப்புள்ள மரங்களும் வளர்க்கப்படுகின்றன. இந்த விவசாய முறையால் மண் வளம், நதிநீர் வளம், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் வருமானம் ஒரே நேரத்தில் மேம்படுவதால் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகள் தங்களின் வருமானத்தை 3 முதல் 5 மடங்கு வரை அதிகரிக்க முடியும். இதனை ஊக்குவிக்கும் வகையில், தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் உள்ளிட்ட மதிப்புமிக்க டிம்பர் மரங்களின் கன்றுகளும், தொடர்ச்சியான வருமானத்தைப் பெறுவதற்காக சமவெளிப் பகுதிகளில் வளரக்கூடிய மிளகு, அவகடோ, ஜாதிக்காய் போன்ற பயிர்களின் கன்றுகளும் விவசாயிகளுக்கு, ஈஷா நர்சரிகள் மூலம் மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.
ஆசியாவிலேயே மிகப்பெரியதும், முழுமையாக பெண்களால் நிர்வகிக்கப்படுவதுமான கடலூர் நர்சரியில் ஆண்டுதோறும் 85 லட்சம் மரக்கன்றுகளும், திருவண்ணாமலை நர்சரியில் 15 லட்சம் மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த இரு நர்சரிகளும் இணைந்து தமிழ்நாட்டிலுள்ள 45 விநியோக மையங்களுக்கும், கர்நாடகாவிலுள்ள 8 விநியோக மையங்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கி, மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் பணியில் முக்கிய பங்காற்றி வருகின்றன.
இதனுடன் மரக்கன்று நடவு மற்றும் பராமரிப்பு தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களையும் காவேரி கூக்குரல் இயக்கம் இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கு ஏற்ற மரவகைகள் தேர்வு, நீர் மற்றும் களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி உள்ளிட்ட ஆலோசனைகளை, காவேரி கூக்குரல் களப்பணியாளர்கள் நேரடியாக விவசாய நிலங்களுக்குச் சென்று வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.