January 22, 2025
தண்டோரா குழு
கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஜனவரி 22,2025 அன்று காலை 7:30 மணிக்கு கோயம்புத்தூர் பந்தைய சாலையில் உறுப்பு தான விழிப்புணர்வு நடைப்பயணத்தை ஏற்பாடு செய்தது.இந்த நிகழ்வில் உறுப்பு தானத்திற்கு மக்கள் தங்கள் ஆதரவை உறுதியளிப்பது மற்றும் அதன் உயிர் காக்கும் தாக்கம் குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, தமிழ்நாடு உறுப்பு மாற்று உறுப்பு நியமன ஆணையம் (TRANSTAN) மற்றும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) ஆகியவற்றுடன் இணைந்து, ஒரு லட்சம் தானதாரர்கள் பதிவு செய்வதை இலக்காக கொண்டு ஆன்லைன் உறுப்பு தான டிரைவ் ஒன்றை தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக ,ஜனவரி 22,2025 அன்று, பந்தைய சாலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக உறுப்பு தான விழிப்புணர்வு நடைப்பயணத்தை ஏற்பாடு செய்தது. எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்
R.சுந்தர் மற்றும் கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் A. சரவண சுந்தர் IPS, ஆகியோர் இந்த நடைப்பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
உறுப்பு தானம் செய்யும் எண்ணத்தை வளர்ப்பதற்கும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், இந்த விழிப்புணர்வு நடைபயணம் நடத்தப்பட்டது. இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களை சார்ந்த 300க்கும் அதிகமான என்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இவர்களுடன் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தன்னார்வலர்களும் இந்த நடைப்பயணத்தில் பாரம்பரிய கலாச்சார உடையில் பங்கேற்றனர்.அவர்கள் ஒன்றாக நடந்து சென்று உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்குக் கற்பித்தனர் மற்றும் தன்னார்வலர்களாக மாற ஊக்குவித்தனர்.
நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் பேராசியர்,ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.பாரதியார் பல்கலைக்கழகத்தின் என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கலந்துகொண்டார்.
நடைப்பயணத்திற்குப் பிறகு எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் R. சுந்தர் மற்றும் கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் A.சரவண சுந்தர் IPS, ஆகியோர் பொதுமக்களிடம் உறுப்பு தானம் செய்ய ஊக்குவித்தனர்.
கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் A.சரவண சுந்தர் IPS பேசுகையில்,
உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் இன்று கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.முன்னர் உணவு தானம் மற்றும் கண் தானம் ஆகியவற்றில் சமூகம் கவனம் செலுத்திய நிலையில், தற்போது உடல் உறுப்பு தானத்திலும் சமமான கவனம் செலுத்தப்படுகிறது என கூறினார்.
கோவையில் தானம் செய்யப்பட்ட உறுப்புகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு தடையின்றி கொண்டு செல்வதற்கான பாதைகளை மாநகர காவல் துறை அமைத்துத்தருவதன் மூலம் உடல் உறுப்பு தான முயற்சிகளை ஆதரித்து வருகிறது என அவர் கூறினார்.
உடல் உறுப்பு தானம் குறித்த பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் தொலைநோக்கு முயற்சிகளுக்கு ஆணையர் வாழ்த்து தெரிவித்தார்.எஸ்.என்.ஆர். சான்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் பேசுகையில், ஒரு ஆரோக்கியமான நபர் இறந்த பிறகு உடல் உறுப்பு தானம் மூலம் எட்டு உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று கூறினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) மற்றும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) ஆகியவற்றுடன் இணைந்து, தன்னார்வ ஆன்லைன் உறுப்பு தான இயக்க பிரச்சாரத்தின் மூலம் இந்த நோக்கத்தை தீவிரமாக ஊக்குவித்து வருவதாக பகிர்ந்து கொண்டார். மூன்று மாதங்களுக்குள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ உறுப்பு தானம் செய்பவர்களைப் பதிவு செய்வதே இந்த பிரச்சாரத்தின் நோக்கமாகும்.
2016 ஆம் ஆண்டு இம்மருத்துவமனையால் கோயம்புத்தூரில் நடத்தப்பட்ட இதேபோன்ற பிரச்சாரத்தையும் அவர் நினைவு கூர்ந்தார். அதில் 13,206 நபர்கள் உறுப்பு தானம் செய்பவர்களாகப் பதிவு செய்தனர். அந்த பிரச்சாரம் உலக சாதனைக்கான முயற்சியாக அமைந்தது. இந்த ஆண்டும் இதேபோன்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என கூறினார்.
இந்தியாவில் உள்ள யார் வேண்டுமானாலும் இதற்கான பிரத்யேக QR குறியீட்டை ஸ்கேன் செய்து தேவையான விவரங்களை வழங்குவதன் மூலம் தானம் செய்பவராகப் பதிவு செய்யலாம் என்ற அவர் இந்த முயற்சி பொதுமக்களிடமிருந்து வாழ்த்துக்களை பெற்றுள்ளது எனவும் பல கார்ப்ரேட் நிறுவனங்களும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
உறுப்பு தானத்திற்கான பதிவு செய்ய https://www.sriramakrishnahospital.com/organ-donation என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.