• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு சோமநாதர் திருக்கோவில்

January 21, 2017 findmytemple.com

சுவாமி: சோமநாதேஸ்வரர்.

அம்பாள்: வேயுறு தோளியம்மை, மகாலட்சுமி, ஆதித்ய அபயப்ரதாம்பிகை, வேதநாயகி, ஆலாலசுந்தரநாயகி, துர்க்கை.

மூர்த்தி : துவார விநாயகர், சிந்தாமணி கணபதி, சிவலோக நாதர், காசி விஸ்வநாதர், மகாலட்சுமி, நடராசர், கால பைரவர், முனையாடுவார் நாயனார்.

தீர்த்தம் : புஷ்கரணி, செங்கழு நீரோடை, பத்திரகாளி தீர்த்தம், பருதிகுண்டம், வருண தீர்த்தம்,சூரிய தீர்த்தம்.

தலவிருட்சம்: மகிழ மரம்.

தலச்சிறப்பு:

சோமநாத சுவாமி சுயம்பு மூர்த்தியாக, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் தொழுத மூர்த்தியாக, இப்பூவுலகில் கைலாசமாக விளங்கும் புண்ணியத் தலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சோமநாத சுவாமி சகல சாபங்களையும், தோஷங்களையும் நீக்க வல்லவர்.

இத்திருத்தலம் காவிரி ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது.சோமநாதசுவாமி கொலுவிருக்கும் விமானம் இருதளம் எனப்படும் கீர்த்தி மிகு விமானம் ஆகும். சூரியநாராயணனே இங்கு தங்கி, அப்பனாம் சோமநாதப் பெருமானையும், அம்மையாம் வேயுறு தோளியம் பாளையும் தொழுதேத்திய புகழ் மிக்க தலமிது.

பெரும் பதவிக்காரனாகிய தேவேந்திரனே உருவாக்கி, தொழுதேத்திய திவ்ய மூர்த்தியாம் இந்த சோமநாத மூர்த்தி. சகல பிறவிகளிலும் ஏந்திய சாபங்களை, தோஷங்களை நீக்க வல்லவர். எந்த ஒரு இன்பத்திற்கும், துன்பத்திற்கும் அடிப்படையான காரணம் உண்டு.

துக்கங்களைக்களையும், சங்கடங்களை நீக்கச் செய்யும் கருவூலமே இச்சோமநாதப் பெருமான். ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதமான சூரியன் ஆதிக்கங் கொண்ட இத்திங்களில், சுவாமி மீது சூரிய ஒளி படுவது சிறப்பு ஆகும். இத்தலத்தில் நவகிரகங்கள் கிடையாது.

ஆனால், நவகிரகங்கள் ஒன்றிணைந்து, ஒரே தீர்த்தமாக, “ஒன்பது தீர்த்தம்” என்றே போற்றப்படும் புஷ்கரணி இங்குள்ளது. பல கோயில் சென்று பூஜைகள் புரிந்து பயனின்றி போனாலும் இத்தலத்தில் ஒன்பது தீர்த்த மெனும் புஷ்கரணியில் நீராடினால் நவகிரக தோஷங்கள் உள்ளிட்ட சகல தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

உற்சவருக்கு சோமாஸ்கந்தர் என்று பெயர். பாம்பைப் போலவே, தனது ஆத்ம சக்தியை ஆட்டி பாம்பாட்டி என்ற பெயர் பெற்ற சித்தர் அருள் பெற்ற திருத்தலம் ஆகும். சிவயோக சித்தரான தேவனார் திருமாங்கல்ய பலம் தரும் தேவதை, மாங்கல்ய தாரண தேவதையான இவளே இத்திருத்தலத்து விருட்சமான ‘மகிழ’ மரமாகவும் நிற்கின்றாள் என்கிறார். இந்த விருட்சத்தை தொழுதக்கால், பூரிப்பெய்தி மகிழ்வான இல்லறம் கிடைக்கும் என்கிறது சித்தர் தம் வாக்கு. நடராஜப் பெருமான் சுதை வடிவில் அமைந்திருப்பது சிறப்பு.

எந்தச் செயலையும் செய்வதற்கு முன்பு முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு, பின் பெரியோர்களின் ஆலோசனைப்படியே காரியங்களில் ஈடுபடவேண்டும்.

அதன்படி, இப்புண்ணிய தலத்தில் விநாயகரே பெரியவர், பழையவர், புனிதமானவர் என்ற மூன்று நிலைகளில் நிற்கின்றார். இந்த வடிவங்களை சிந்தாமணி விநாயகர், செல்வமகா விநாயகர், சிவானந்த விநாயகர் என்று அழைத்தனர் சித்தர் முது மக்கள்.

படைக்கும் தொழில் புரியும் பிரம்மதேவர் உள்ளிட்ட மூர்த்தியரும் இம்மூன்று அம்சங்களையும் தியானித்த பிறகே தம் பணியில் ஈடுபடுகின்றனர். எனவே, நாமும் இதனைப் பின்பற்றி செயல்பட்டால், குறைகள் நீங்கி இன்பம் பெறலாம். ஊழிக்காலத்திலும் அழியாது நெடுங்காலமாக நிலைத்திருக்கும் காரணமாக நீடூர் என வழங்கப்படுகிறது. சோழ மன்னர்களில் முதல் குலோத்துங்கன், இரண்டாம் இராசராஜன், மூன்றாம் இராசராஜன் ஆகியோர் காலக் கல்வெட்டுக்கள் உள்ளன.

தல வரலாறு :

தேவேந்திரன் காலை நேரத்தில் சிவபூஜை செய்வது வழக்கம். தேவேந்திரனுக்கு இத்திருத்தலத்தில் சிவலிங்கம் ஏதும் தென்படவில்லை. எனவே காவிரி ஆற்றின் மணலில் ஒரு சிவலிங்கம் செய்து, ஒரு பாடலைப் பாடி, சிவபெருமானின் நடன தரிசனம் வேண்டி பிரார்த்தித்தான்.

அதனால் மகிழ்ந்த சிவன் இந்திர பகவானுக்கு நடன காட்சி தந்தமையால், “கான நர்த்தன சங்கரா” எனக் கைகூப்பி இந்திரன் ஈசனை வணங்கினார். அன்று முதல் இந்த சோமநாதப்பெருமானுக்கு ‘‘கான நர்த்தன சங்கரன்’’ என்ற பெயர் உண்டாயிற்று.

மணலினாலான இந்த லிங்கத்தில் தேவேந்திரனின் கைவிரல்கள் பதிந்து இருப்பதை இன்றும் காணலாம். இந்த திவ்யமூர்த்தியை ஆவணிமாதம் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் விரதமிருந்து வழிபட்டால், உடம்பில் உள்ள மச்சம், மாறாத வடு, தோலில் ஏற்பட்ட வெள்ளைப் புள்ளிகள், கருப்பு புள்ளிகள், தோல் சம்பந்தமான வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

தன்மசுதன் எனும் கொடிய அரக்கன் தன்வினைப் பயனால் நண்டாகப் பிறந்து, நாரதமுனியிடம் சாபவிமோசனம் வேண்டினார், அவரும் சோமநாதரைச் சரணடைய பணித்தார். நாரதமுனியின் அறிவுரைப்படி சிவதரிசனம் பெற்ற தன்மசுதன், சிவனிடம் ஐக்கியமானான். நண்டு சென்று சிவபெருமானிடம் ஐக்கியமான துளை இன்றும் சிவ லிங்கத்தில் காணப்படுகின்றது.

பத்ரகாளியம்பிகை இச்சிவனை தொழுதே கைலாயம் சென்றாள் என்பது நம்பிக்கை. தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக விளங்குபவர் இத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன். எந்த ஒரு நோயும், தொல்லையும், நாம் செய்யும் பாவங்களினால்தான் வருகின்றது என்கிறது சித்தர் தம் வாக்கு.

தோஷங்கள், நோய், தொல்லை, கஷ்டங்கள் யாவும் இந்த சோமநாதரைத் வழிபட்டால் விலகும் என்பது நம்பிக்கை. விய ஆண்டு பங்குனி மாதம் 22ம் நாள், (05 – 04 – 2007) வியாழக்கிழமை, திருதியை திதி சுவாதி நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், ரிஷப லக்னத்தில் அருள்மிகு ஸ்ரீ வேயுறுதோளியம்மை உடனுறை அருள்மிகு ஸ்ரீ சோமநாத சுவாமி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வழிபட்டோர் : இந்திரன், சூரியன், காளி, நண்டு, சந்திரன், முனையடுவார் நாயனார்.

பாடியோர் : அப்பர், சுந்தரர்.

நடைதிறப்பு : காலை 6.00 மணிமுதல் மதியம் 12.00 மணிவரை, மாலை 4.00 மணிமுதல் இரவு 08.00 மணிவரை.

பூஜை விவரம் : இரண்டு கால பூஜை.

திருவிழாக்கள் :

சித்திரை பௌர்ணமி விழா,

புரட்டாசி – நவராத்திரி,

மார்கழி – திருவாதிரை,

மாசி – சிவராத்திரி,

பங்குனி – குருபூஜை.

அருகிலுள்ள நகரம் : மயிலாடுதுறை.

கோவில் முகவரி : அருள்மிகு சோமநாதர் திருக்கோவில்,நீடூர் அஞ்சல் – 609 203, மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.

மேலும் படிக்க