• Download mobile app
30 May 2026, SaturdayEdition - 3762
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புற்றுநோய் விழிப்புணர்வு ‘ஸ்பின் வீல்’ QR குறியீட்டை அறிமுகப்படுத்திய காவல் ஆணையர் கண்ணன்

May 30, 2026 தண்டோரா குழு

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு,கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையர் திரு. கண்ணன், IPS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதுமையான “புற்றுநோய் விழிப்புணர்வு ஸ்பின் வீல்” QR குறியீட்டை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் குகன் வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன்,இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு தகவல்களை எளிதில் கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக தெரிவித்தார்.

அதனை கருத்தில் கொண்டு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய புதிய விழிப்புணர்வு முயற்சியாக இந்த “ஸ்பின் வீல்” வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த முயற்சியின் மூலம் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், நுரையீரல் பாதிப்புகள் உள்ளிட்ட தீவிர நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு எளிமையாக எடுத்துரைக்க முடியும் என்றார்.

தொடர்ந்து பேசிய மாநகர காவல் ஆணையர் கண்ணன்,

புகையிலை பயன்பாட்டின் தீமைகள் குறித்து சமூகத்தில் தொடர்ச்சியான விழிப்புணர்வு அவசியம் என வலியுறுத்தினார். குறிப்பாக இளைஞர்களிடையே அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தை கட்டுப்படுத்த குடும்பம், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் முயற்சி பாராட்டத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் குகன்,

கடந்த 23 ஆண்டுகளாக ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இதற்கு முன்பு புற்றுநோய் விழிப்புணர்வு வீடியோக்கள், டிஜிட்டல் புத்தகங்கள், இணையதளங்கள், வாட்ஸ்அப் சாட்பாட்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு அனைத்து வயதினரையும் எளிதில் சென்றடையும் வகையில் “ஸ்பின் வீல்” QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

புகையிலை பயன்பாடு உலகளவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான உயிரிழப்புகளுக்கு காரணமாக இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக வாய்ப்புற்றுநோய், தொண்டைப்புற்றுநோய், குரல்வளை புற்றுநோய்,உணவுக்குழாய் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு புகையிலை முக்கிய காரணமாக விளங்குகிறது.

இந்தியாவில் ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவை புகையிலை பழக்கத்துடன் தொடர்புடையவை என்பது கவலைக்குரிய உண்மையாகும்.புகையிலை பயன்படுத்துபவர்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி, அவர்களுக்கு ஏற்படும் உடனடி மற்றும் நீண்டகால பாதிப்புகளை இந்த ஸ்பின் வீல் QR குறியீடு மூலம் விளக்க முடியும். இதில் தினசரி குறுஞ்செய்திகள்,விழிப்புணர்வு தகவல்கள், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஆடியோ விளக்கங்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்த முடியும். கன்னத்தில் வெள்ளை படலம் தோன்றுதல், குரல் மாற்றம், உணவு விழுங்குவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர். மேலும் புகையிலை பழக்கத்தை முற்றிலும் கைவிட்டால், 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் உடல்நிலை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இலவச ஓரல் கேன்சர் ஸ்கிரீனிங் முகாமும் நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் வாரத்தில் நான்கு நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் புகையிலை பழக்கத்திலிருந்து விடுபட விரும்புபவர்களுக்கு சிறப்பு ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

நிகழ்வின் இறுதியில் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேஷ் நன்றியுரை வழங்கினார்.இதில் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் மற்றும் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள்,பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க