• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குப்பை வீட்டில் இருந்து 80 வயது பாட்டி மீட்பு

May 26, 2016 தண்டோரா குழு.

சுமார் 10 வருடங்களாகக் குப்பை, கூளம், புழு, பூச்சி, எலி, மற்றும் பல ஜந்துக்களுக்கிடையில் வாழ்ந்து கொண்டிருந்த 80 வயது உடல் ஸ்வாதீனமில்லாத மூதாட்டி மும்பையின் ஜாவர் ரோடிலுள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தின் 3ம் நம்பர் வீட்டிலிருந்து மும்பை மாநகராட்சி முனிசிபல் ஊழியர்களால் மீட்கப்பட்டார்.

பிரிஹான் மும்பையில் 12 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடத்தின் 3 வது வீடு சாவ்லா குடும்பத்திற்குச் சொந்தமானது. இவர்கள் மொத்தம் 7 பேர். ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் சில வருடங்களுக்கு முன்பு இறந்தனர். கடந்த 2000ம் ஆண்டு தந்தையும் இறந்து விட்டார்.

இவர்கள் குஜராத் கட்ச் பகுதியில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். இவர்களின் 80 வயது தாய் சித்த மற்றும் உடல் நலமில்லாதவர்.

ஒரு படுக்கை அறை, ஒரு வரவேற்பறை மேலும் ஒரு சமையல் அறை கொண்ட 550 சதுர அடி வீட்டில் 2 சகோதரர்களும்,2 சகோதரிகளும் வயதான மூதாட்டியும் வசித்து வந்துள்ளனர்.

இந்தக் குடும்பத்திலுள்ளவர்கள் மிகவும் விசித்திரமானவர்கள். சமூகத்துடன் ஒட்டாதவர்கள், சமூகநலனில் அக்கறை இல்லாதவர்கள், சுகாதாரம் என்பதே சிறிதுமில்லாதவர்கள், என்பது அண்டை அயலாரின் புகார்.

சுமார் 10 வருடங்களாகச் சேர்த்த கழிவுப் பொருட்கள், மீதமான உணவுப் பொருட்கள், குப்பைகள், கெட்டுப் போன பதார்த்தங்கள், கூளங்கள் ஆகிய அனைத்தையும் தங்களது வீட்டிற்குள்ளேயே மலை போலக் குவித்துள்ளனர். இதற்கிடையே தங்களது வயதான தாயாரையும் படுக்கவைத்துள்ளனர்.

சுயமாக அசைய முடியாத அப்பெண்மணி தன்னுடைய இயற்கை உபாதைகள் மற்றும் இந்த கழிவுப் பொருட்களுக்கிடையிலும் பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருந்தார்.

இருக்கும் ஒரே குளியலறையில் வேண்டாத கழிவுகளோடு தங்களது தாயாரையும் படுக்கவைத்திருப்பதால் இக்குடும்பத்தினர் குளிப்பதேயில்லை. இந்த இரு சகோதரர்களும், இரு சகோதரிகளும் மாடிப் படியருகே தான் உணவு உண்பது வழக்கம். இரு சகோதரிகளும் மாடிப் படியருகேயும், சகோதரர்கள் இருவரும் எதிர்புற நடைபாதையிலும் படுத்து உறங்குவர்.

இவர்கள் யாருடனும் பேசியதுமில்லை, எந்த விழாவிலும் கலந்து கொண்டதுமில்லை, விழா கொண்டாடியதுமில்லை. இது போன்ற விசித்திரமான நடவடிக்கை உள்ளவர்கள் நிச்சயமாகச் சித்த ஸ்வாதீனமற்றவர்களாகவே இருக்கவேண்டும் என்று அண்டை வீட்டில் வசிக்கும் கட்டிடக் கலைஞரான நிவிடேடா மன்வாட்கர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்த மக்கிய கழிவுகளிலிருந்து வரும் துர்நாற்றத்தைச் சகிக்க முடியாமல் பல முறை அக்கட்டிட சங்கத்தின் தலைவர் சிராக் காந்தி இவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் எந்தப் பயனும் இல்லை. மாநகராட்சியிடம் அளித்த விண்ணப்பங்களும் பலன் அளிக்கவில்லை.

ஆயினும் விடாது முயன்றதன் விளைவாக இறுதியில் மாநகராட்சியின் சுகாதாரத்துறை ஊழியர்கள் கடந்த வாரம் நடவடிக்கை எடுக்க முற்பட்டனர். முன்புறம் திறக்க முடியாமல் பின் புறக்கதவை உடைத்து உள் புகுந்தனர். கிட்டத்தட்ட 30 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். சுமார் 8 லாரி சுமைக் கழிவுகளை அப்புறப்படுத்தினர்.

நாட்கணக்காக அசையாமல் இருந்தமையால் ஏற்பட்ட படுக்கைப் புண்கள், அச்சுகாதார சூழ்நிலையால் ஏற்பட்ட தொற்று நோய்கள், சருமநோய்கள், இவை மட்டுமல்லாது புழு, பூச்சி, எலி, புறாக்களால் கடிக்கப்பட்ட காயங்கள் ஆகியவற்றோடு குற்றுயிரும் குலையுயிருமாகக் காணப்பட்ட அந்த மூதாட்டியை முனிசிபல் ஊழியர்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

இது குறித்து சங்கத்தலைவர் காந்தி கூறுகையில், சாவ்லா குடும்பத்தினர் ஏழைகளல்ல என்றும், இந்தச் சகோதரர்கள் இருவரும் வாஷியைச் சேர்ந்த APMC மார்க்கெட்டில் தரகுத் தொழில் புரிபவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இவர்களுக்கு நவி மும்பையில் ஒரு 4 மாடிக்கட்டிடமும், ஒரு பெரிய கிடங்கும் உள்ளது. மேலும் அதே வீதியில் வேறு ஒரு வீடும் உள்ளது என்றும் தெரிவித்தார்.

அந்த வீட்டையும் இதே போல் கிழிந்த ஷூ மற்றும் செருப்பு போன்றவற்றால் நிரப்பியுள்ளனர். அங்குள்ள அண்டை வீட்டாரும் துர்நாற்றம் தாங்காமல் காலணிகளை எரிமூட்டியுள்ளனர்.

யதார்த்த நிலையை நேரில் கண்டறிந்த அதிகாரிகள் இக்குடும்பத்தினரை எச்சரித்துள்ளனர்.

மேலும் படிக்க