May 10, 2025
தண்டோரா குழு
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நபரிடமிருந்து பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் பாபு.இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.இவரும், ஃபேஸ்புக் மூலம் இவருக்கு நண்பரான சுதாகர் என்பவரும் வெளிநாட்டில் வேலை பெறுவதற்கு முயற்சித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் ரெட்டி என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக தெரிய வந்துள்ளது. இருவரும் அவரை தொடர்பு கொண்ட போது, ஸ்விட்சர்லாந்து நாட்டில் செயல்பட்டு வரும் செல்லாரா என்ற நிறுவனத்தின் தலைவராக உள்ளதாகவும்,அங்கு ஏராளமான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகள் இருப்பதாகவும் சஞ்சீவ் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.வெளிநாட்டில் வேலை பெறுவதற்கு முதல் கட்டமாக நபர் ஒருவருக்கு மூன்று லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமென சஞ்சீவ் குமார் ரெட்டி, மகேஷ் பாபுவிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிக அளவில் ஆட்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு தேவை என்பதால் முன்பணம் கொடுத்தால் அனைவருக்கும் வேலை வாங்கி தருவதாகவும் தெரிவித்துள்ளார்.இதற்காக மகேஷ் பாபு மற்றும் சுதாகர் ஆகிய இருவருக்கும் உரிய கமிஷன் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பல்வேறு நபர்களிடம் பணத்தைப் பெற்று பல்வேறு தவணைகளில் இருவரும் கோவை வந்து சஞ்சீவ் குமார் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து சுமார் 5 கோடி ரூபாய் வரை பணம் வழங்கி உள்ளனர்.பணத்தை பெற்றுக் கொண்ட சஞ்சீவ் குமார் அந்த நபர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான பணி ஆர்டர்களை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனிடையே வேலை தொடர்பாக அவரை தொடர்பு கொண்ட போது சஞ்சீவ் குமார் ரெட்டி தொடர்புகளை துண்டித்ததோடு, கோவையில் இருந்து தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.அவரை கண்டறிய முயன்றபோது அவர் தலைமறைவாகி இருந்தது தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்த மகேஷ் பாபு இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் சஞ்சீவ் குமார் ரெட்டி இதேபோன்று தஞ்சாவூர், கேரளா உள்ளிட்ட இடங்களிலும் பலரிடம் பல கோடி ரூபாய் அளவிற்கு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்திருப்பது தெரிய வந்ததாக தெரிவித்துள்ளார்.எனவே தலைமறைவாக உள்ள சஞ்சீவ் குமார் ரெட்டியை கண்டுபிடித்து தங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.