September 24, 2026
தண்டோரா குழு
ராமநாதபுரம் மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு மார் பால் ஆலப்பாட் அவர்களால் நிறுவப்பட்டு,பட்டணம் எல் & டி பைபாஸில் இயங்கி வரும் மாத்தர் தேய் இண்டர்நேஷனல் பள்ளி தனது 10-ஆம் ஆண்டு பயணத்தைக் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு அங்கமாக , நடப்பு கல்வியாண்டில் விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் பிராந்திய அளவில் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில் பாராட்டு விழா மற்றும் செய்தியாளர் சந்திப்பு பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அருட்தந்தை ஃபேபின் நீலங்காவில்,உதவித் தாளாளர் அருட்தந்தை சச்சின் காலிங்கல்
ஆகியோர் முன்னிலை வகித்து,சாதனை படைத்த மாணவர்களுக்கு விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தனர்.
இவ்விழாவில் பள்ளி முதல்வர் கேரென் அகஸ்டின் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“நமது பள்ளி ICSE போர்டின் விதிமுறைகளை பின்பற்றி தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதோடு, விளையாட்டுத் துறைக்கும்,கலைகளுக்கும் சமமான முக்கியத்துவத்தை அளித்து வருகிறது. மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்க ஸ்கேட்டிங் (Skating), கராத்தே (Karate), ஆர்ச்சரி (Archery), கபடி (Kabaddi) கூடைப்பந்து ( basket ball) நடனம் (Dance) இசை (Music) கலை மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல்(Art & Craft) போன்ற துறைகளுக்குச் சிறப்புப் பயிற்சியாளர்களை (Special Coaches) நியமித்துத் தொடர்ந்து பயிற்சிகள் வழங்கி வருகிறோம்.
அதன் விளைவாக, நமது பள்ளி மாணவர்கள் மண்டல (Zonal), பிராந்திய (Regional) மற்றும் தேசிய அளவிலான (National Level) பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சாதனைகளைப் படைத்து வருகின்றனர். வரும் காலங்களிலும் நமது பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டு துறைகளிலும் பன்முகத்தன்மையோடு ஒளிரும்” எனத் தனது உரையில் கூறினார்.
வெற்றி பெற்ற மாணவர்களின் விபரங்கள் பின்வருமாறு:
நான்காம் வகுப்பில் பயிலும் ஃபெர்டினோ ஜோசப்- 11 வயதுக்குட்பட்டோர் ஸ்கேட்டிங் பிரிவில் சி.ஐ.எஸ்.சி.இ மண்டல அளவிலான போட்டியில் ரோட் ரேஸ் (Road Race) பிரிவில் முதலிடமும் (தங்கப் பதக்கம்), 500 மீட்டர் பிரிவில் இரண்டாமிடமும் (வெள்ளிப் பதக்கம்) வென்றார். மகாராஷ்டிராவின் தானேவில் நடைபெற்ற சி.ஐ.எஸ்.சி.இ தேசியப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
14 வயதுக்குட்பட்டோர் வட்டு எறிதல் பிரிவில்- (Discus Throw): சி.ஐ.எஸ்.சி.இ மண்டல அளவில் வட்டு எறிதலில் இரண்டாமிடம் பிடித்து, ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசியப் போட்டிக்குத் தகுதி பெற்றார். மண்டல (Zonal) அளவிலான போட்டியில் குண்டு எறிதலில் (Shot Put) மூன்றாமிடமும், வட்டு எறிதலில் புதிய மண்டல சாதனையுடன் முதலிடமும் பெற்று அசத்தினார்.
கபடி பிரிவில் சி.ஐ.எஸ்.சி.இ மண்டல அளவிலான போட்டியில் மூன்றாமிடம் பெற்று, சி.ஐ.எஸ்.சி.இ தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றார்.
எட்டாம் வகுப்பு பயிலும் தருண் ஆதீஷ் 14 வயதுக்குட்பட்டோர் கபடி பிரிவில் சி.ஐ.எஸ்.சி.இ மண்டல அளவிலான போட்டியில் மூன்றாமிடம் பெற்று, சி.ஐ.எஸ்.சி.இ தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று தனது விடாமுயற்சியையும் குழு உணர்வையும் வெளிப்படுத்தினார்.
ஒன்பதாம் வகுப்பு பயிலும் பிரணேஷ் 17 வயதுக்குட்பட்டோர் கபடியில் சி.ஐ.எஸ்.சி.இ மண்டல அளவில் 4-வது இடம் பிடித்தார். மேலும், ஹைதராபாத்தில் உள்ள ஜான்சன் கிராமர் பள்ளியில் நடைபெற்ற சி.ஐ.எஸ்.சி.இ தேசிய அளவிலான போட்டியில் தனது அணியை வழிநடத்தி மூன்றாமிடத்தைப் பெற்றுத் தந்தார்.
பள்ளி நிர்வாகம் சாதனை படைத்த அனைத்து மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.