• Download mobile app
06 Nov 2026, FridayEdition - 3922
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு பள்ளி மாணவர்கள் சாதனை: 35 கி.மீ. உயரத்தில் பறந்த அறிவியல் ஆய்வுக் கருவி!

November 6, 2026 தண்டோரா குழு

அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 11 அரசு நடுநிலைப் பள்ளிகளின் 55 மாணவர்கள் இணைந்து உருவாக்கிய அறிவியல் ஆய்வுக் கருவி, ஹீலியம் பலூன் மூலம் 35 கி.மீ., உயரத்துக்கு அனுப்பப்பட்டு சாதனை படைத்துள்ளது.

ரோட்டரி இ-கிளப் ஆஃப் மெட்ரோ டைனமிக்ஸ், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் அங்கீகாரம் பெற்ற விண்வெளிப் பயிற்றுநர் அமைப்பான ஓப்பன் ஸ்பேஸ் பவுண்டேஷன் மற்றும் CSTERC டெக்னோ சயின்ஸ் எல்.எல்.பி., ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளன. ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3206 இத்திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது.

‘உயர்வு’ எனப் பெயரிடப்பட்ட இத்திட்டத்தின் வாயிலாக, 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 55 மாணவர்கள் அறிவியல் ஆராய்ச்சியின் பல்வேறு நுட்பங்களைப் பயின்று, சுமார் 2 கிலோ எடையுள்ள ஆய்வுக் கருவித் தொகுப்பை உருவாக்கினர்.

கடந்த அக்., 30ம் தேதி ஹீலியம் பலூன் மூலம் ஏவப்பட்ட இந்த ஆய்வுக் கருவி, பூமியின் மேற்பரப்பிலிருந்து 35 ஆயிரம் மீட்டருக்கும் அதிகமான உயரத்தை அடைந்தது. பூமியின் அடுக்கு மண்டலப் பகுதியில் பயணித்த இந்தக் கருவியில் வெப்பநிலை, காற்றழுத்தம், ஈரப்பதம், உயரம் மற்றும் வளிமண்டலத்தில் மிதக்கும் நுண்துகள்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.

விண்ணருகிலிருந்து பூமியின் புகைப்படங்கள்

இந்த ஆய்வுப் பயணத்தின் போது, 35 கி.மீ., உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படங்கள் முதன்முறையாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டன. விண்ணருகு வளிமண்டலத்திலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ள இந்தப் புகைப்படங்கள், மாணவர்களின் அறிவியல் முயற்சிக்குக் கிடைத்துள்ள முக்கிய வெற்றியாகக் கருதப்படுகின்றன.

330 மாணவர்கள் அடுத்தகட்ட ஆய்வில் பங்கேற்பு

இந்தத் திட்டத்தின் அடுத்தகட்டமாக, பங்கேற்ற பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 330 மாணவர்கள் ஆய்வுக் கருவி சேகரித்த அறிவியல் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய உள்ளனர்.வளிமண்டலத்தில் உள்ள நுண்துகள்களின் தன்மை, காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் தரம் ஆகியவற்றை மாணவர்கள் ஆய்வு செய்து, அறிவியல் அறிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான பரிந்துரைகளைத் தயாரிக்க உள்ளனர். இவை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்களிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

திட்டத்தின் பின்னணியில்…
ரோட்டரி இ-கிளப் ஆஃப் மெட்ரோ டைனமிக்ஸ் தலைவர் மற்றும் திட்டத் தலைவரான ரோட்டரியன் வித்யா தத்தமங்கலம், திட்டத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொண்டார்.ஓப்பன் ஸ்பேஸ் பவுண்டேஷன் மற்றும் CSTERC டெக்னோ சயின்ஸ் நிறுவனங்களின் இணை நிறுவனரும், அபுதாபி அல் சதீம் அஸ்ட்ரானமியின் முதன்மை விஞ்ஞானியுமான சுரேந்தர் பொன்னழகர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பணிகளுக்குத் தலைமை தாங்கினார்.

இணை நிறுவனரும் கல்வியாளருமான பரத்குமார் வேலுசாமி மாணவர்களுக்குப் பயிற்சியும் வழிகாட்டுதலும் வழங்கினார். துடியலூர் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர் டாக்டர் எஸ். சித்ரா, மாணவர்களின் பங்கேற்பு மற்றும் பள்ளி அளவிலான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டார்.

ரோட்டரியின் சின்னமும் விண்ணருகு பயணம்

இந்த அறிவியல் ஆய்வுப் பயணத்தில் ரோட்டரியின் சின்னமும் ஆய்வுக் கருவியுடன் எடுத்துச் செல்லப்பட்டது. கல்வி, அறிவியல் மற்றும் சமூக சேவையை இணைக்கும் முயற்சியாக இத்திட்டம் அமைந்துள்ளது.
இது குறித்து திட்டக் குழுவினர் கூறுகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நவீன அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். மாணவர்கள் வெறும் பாடப்புத்தக அறிவுடன் நின்றுவிடாமல், நேரடி ஆராய்ச்சி, தரவுப் பகுப்பாய்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்றனர்.

செய்தியாளர் சந்திப்பில் ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3206 மாவட்ட ஆளுநர் ரோட்டரியன் ஆர்.எஸ். மாருதி, ரோட்டரி இ-கிளப் ஆஃப் மெட்ரோ டைனமிக்ஸ் உடனடி முன்னாள் தலைவர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரோட்டரியன் மகேஷ் பிரபு, பரத்குமார் வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வகுப்பறையில் தொடங்கிய மாணவர்களின் அறிவியல் பயணம், 35 கி.மீ., உயரத்தை எட்டியிருப்பது கோவைக்கு பெருமை சேர்த்துள்ளது.

மேலும் படிக்க