• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராம்மோகனராவ் ராஜிநாமா செய்ய வேண்டும் – மு.க. ஸ்டாலின்

December 21, 2016 தண்டோரா குழு

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்துவது தமிழகத்தைத் தலைகுனிய வைத்துள்ளது. ராம்மோகன ராவ் தலைமைச் செயலர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தி.மு.க. பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சிச் தலைவருமான மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். சில வாரங்களாகவே, தொழிலதிபர்கள் என்ற பெயரில் ஆளுங்கட்சியினருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான இடங்களில், சோதனை நடைபெற்று வருகிறது. ஆனால், அவை பற்றிய முழுமையான உண்மைத் தகவல்களை மத்திய அரசு வெளியிடவில்லை.

அண்மையில் சோதனைகளுக்குள்ளான மணல் வியாபாரியான சேகர் ரெட்டியிடம் புது, 2,000 ரூபாய் நோட்டுகள் உள்பட கோடிக் கணக்கான ரூபாய் பணமும், கிலோ கணக்கில் தங்கமும் வருமான வரித் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அதன் தொடர்ச்சியாகத் தலைமைச் செயலாளர் வீட்டில் புதன்கிழமை சோதனை நடைபெற்றுள்ளது.

மணல் வியாபாரி சேகர் ரெட்டியுடனும் கட்டுமானத் தொழில் செய்பவர்களுடனும் அமைச்சர்கள் பலரும் தொடர்பில் உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. தமிழக அமைச்சர்கள் பலரும் இத்தகைய வியாபாரிகள், தொழிலதிபர்கள் போன்றோருடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. அமைச்சர்களுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்துவது தமிழகத்தைத் தலைகுனிய வைத்துள்ளது. தமிழக நலன்களைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் சொந்த லாபங்களுக்காகச் செயல்படும் அமைச்சர்கள், அதிகாரிகள், ஆளுங்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது கடுமையாகவும், வெளிப்படையாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஊழல் முறைகேடுகள் மூலம் லாபம் பார்த்த ஆட்சியாளர்களும், ஆட்சியை ஆட்டி வைப்பவர்களும் தப்பி விடக்கூடாது. ராம்மோகன ராவ் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய வேண்டும். புதிய தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க