March 23, 2018
தண்டோரா குழு
சென்னையில் டிஜிபி அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் கைதான காவலர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
தேனி மாவட்டத்தில் ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றி வரும் ரகு, கணேஷ் என்ற இரு காவலர்கள் டி.ஜி.பி அலுவலகத்தில் கடந்த(மார்ச் 21)புகார் மனு அளித்தனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் திடீரென தங்கள் கையில் வைத்திருந்த மண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.அப்போது, டி.ஜி.பி அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சக காவலர்கள் அவர்களை தடுத்தனர்.
தேனி மாவட்டத்தில் அவர்கள், பணியாற்றிய போது,சாதி ரீதியாகப் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.அதனால்,காரணமில்லாமல் தங்களை ராமநாதபுரத்துக்கு பணியிடமாற்றம் செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், தீ குளிக்க முயன்ற காவலர்கள் 2 பேரும் மீதும் மெரினா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த கோர்ட் அனுமதி வழங்கியது.இதனைத்தொடர்ந்து, விசாரணை முடிவில் இருவரும் எழும்பூர் 13வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.