September 7, 2026
தண்டோரா குழு
கோவை துடியலூரில் கார் வியாபாரிகள் நண்பர்கள் கூட்டமைப்பு சார்பில், ‘மெகா பயன்படுத்திய கார்கள் விற்பனை திருவிழா’ வரும் செப்டம்பர் 10 முதல் 14-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.
கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், துடியலூர் வி.ஜி. மருத்துவமனை எதிரே உள்ள மைதானத்தில் நடைபெறும் இந்த விற்பனைத் திருவிழாவில், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 கோடி வரை மதிப்பிலான சிறிய பட்ஜெட் கார்கள் முதல் சொகுசு கார்கள் வரை பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பயன்படுத்திய கார்கள் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீ வைஷ்ணவி கார்ஸ் உரிமையாளர் ராஜசேகர் வரவேற்புரையாற்றினார். அசைன் கார்ஸ் உரிமையாளர் அசைன் அலி தலைமை வகித்தார்.
கார் வியாபாரிகள் கூறுகையில்,
30 முதல் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் அனுபவம் பெற்ற முன்னணி நிறுவனங்கள் ஒன்றிணைந்து, கோவை மாவட்ட கார் வியாபாரிகள் சங்கத்தின் ஒப்புதலுடன் இந்த விற்பனைத் திருவிழாவை நடத்துவதாக தெரிவித்தனர்.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக கண்காட்சி வளாகத்திலேயே உடனடி வங்கிக் கடன், வாகனக் காப்பீடு மற்றும் பழைய காரை கொடுத்து புதிய கார் வாங்கும் ‘எக்ஸ்சேஞ்ச்’ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும்,கார் உதிரிபாகங்கள் மற்றும் எதிர்கால வாகனத் தேவைகள் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.
விற்பனைக்கு வைக்கப்படும் வாகனங்களின் ஆவணங்கள் அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, சங்கத்தின் உத்தரவாதத்துடன் நம்பகமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான காரை தேர்வு செய்து வாங்குவதற்கான சிறந்த வாய்ப்பாக இந்த மெகா விற்பனைத் திருவிழா அமையும் என கார் வியாபாரிகள் நண்பர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கே.பி.கே. மோட்டார்ஸ் கார்த்திக், ஐ.ஏ.ஜி. கார்ஸ் ராஜா, ரோட் மாஸ்டர் மணிகண்டன், ஆர்.ஆர். கார்ஸ் ராதாகிருஷ்ணன், விஜய் கார்ஸ் கோபி, ஜே.கே.கே. கார்ஸ் ஜெயராமன், சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக எஸ்.கே. கார்ஷாப் உரிமையாளர் சஞ்சீவ்குமார் நன்றியுரையாற்றினார்.