September 6, 2026
தண்டோரா குழு
கிட்ஸ் வேர்ல்ட் ஃபவுண்டேஷன் மற்றும் கே.டபிள்யூ.எஃப் உலக சாதனையாளர்கள் புத்தகம் இணைந்து நடத்தும் “தி லிட்டில் லெஜெண்ட்ஸ் – 2026” என்ற பிரம்மாண்ட கலை, கலாசாரம் மற்றும் உலக சாதனை நிகழ்வு கோவையில் நடைபெற்றது.
கோவை கதிர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற,இந்த மாநில அளவிலான விழாவில்,மேற்கு தமிழகம் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகள்,கலை மற்றும் கலாசார பயிற்சி நிறுவனங்களிலிருந்து 3 முதல் 18 வயதுக்குட்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டனர்.
இளைய தலைமுறையினரின் தனித்துவமான திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், பரதநாட்டியம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள், இசை, நாடகம், தற்காப்புக் கலைகள் மற்றும் யோகா போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக நடைபெற்றது.மேலும்,பங்கேற்கும் அனைத்து குழந்தைகளும் ஒன்றிணைந்து ஒரு புதிய உலக சாதனையை படைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
கிட்ஸ் வேர்ல்ட் ஃபவுண்டேஷன் அமைப்பின் நிறுவனர் சுதா மற்றும் செயலாளர் செல்லா ஆகியோரின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இவ்விழாவில்,அமைச்சர் சம்பத் குமார்,
சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியக் கல்வியாளர்கள் கௌரவ விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டிஜிட்டெக் எரா ஃபவுண்டேஷன் நிறுவனர் கே.ஆர் செந்தில் குமார் செய்திருந்தார்.
நிகழ்வில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அதிகாரப்பூர்வ பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.இளம் சாதனையாளர்களின் திறமைகளை அங்கீகரித்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த மாபெரும் விழா அமையும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.