January 28, 2026
தண்டோரா குழு
பரமபூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர குரு சர்வபௌமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 33வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் கோவையில் பிப்.18 முதல் பிப்.24, 2026 வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து கோவை ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ சேவா சங்கத் தலைவர் என். சுந்தரவடிவேலு,இஸ்ரோ முன்னாள் விஞ்ஞனியும், நிகழ்சி தலைவருமான ஸ்ரீனிவாஸ் பத் மற்றும் செயலாளர் வி.ராம்ராஜ் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள்,
ராம்நகர், சத்தியமூர்த்தி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜை சங்கம் வளாகத்தில் ஒரு வாரம் நடைபெறும் இம்மஹோத்சவம்,ஸ்ரீ மத்வாச்சாரியார் நிறுவிய புனித மத்வ பரம்பரையைச் சேர்ந்த மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிஜியின் பட்டாபிஷேகம் மற்றும் ஜன்ம தினோத்சவத்தை நினைவுகூரும் வகையில், பாரம்பரியமாக பால்குண மாதத்தில் நடத்தப்படுகிறது.
ஸ்ரீ ராகவேந்திரா சப்தாஹ காரியசரண சமிதி (மந்த்ராலயம்), ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ சேவா சங்கம், கோவை மற்றும் ஸ்ரீ ஐயப்பன் பூஜை சங்கம் ஆகியவை இணைந்து விழாவை ஏற்பாடு செய்கின்றன.
குருராஜ சன்னிதானத்தில் தினமும் காலை 7.30 மணிக்கு க்ஷீராபிஷேகத்துடன் அஷ்டோத்தர பாராயணம்,8 மணிக்கு பஞ்சாம்ருத அபிஷேகம், லட்ச புஷ்பார்ச்சனையுடன் பாதபூஜை, கனகாபிஷேகம் நடைபெறும். காலை 10.30 மணிக்கு மகாமங்களாராதி,மாலை 7 மணிக்கு தீபோத்ஸவம் மற்றும் மஹாதீபோத்சவம், இரவு 10.30 மணிக்கு ஸ்வஸ்தீபத்ஸவம் நடைபெறும்.
சப்தாஹத்தின் போது தினமும் காலை 6–7.30 மணி வரை அனந்தபுரத்தைச் சேர்ந்த வித்வான் கே.அப்பண்ணாச்சாரியார், டாக்டர் ஜே.சதானந்த சாஸ்திரி ஆகியோரால் சுப்ரபாதம், பிரதா ஸ்மரணை,வேத பாராயணங்கள் நடைபெறும்.காலை 7.30–9 மணி வரை தாரதம்ய பஜனை, பாராயணம், 9–9.30 மணி வரை உடுப்பி பலிமாரு மடத்துடன் தொடர்புடைய அறிஞர்களின் பிரவசனங்கள் நடைபெறும்.
மஹோத்சவத் தொடக்க விழா பிப்.18 புதன்கிழமை மாலை 5.30–7.30 மணி வரை நடைபெறுகிறது.மந்த்ராலயம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தின் பீடாதிபதி பரமபூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ சுபுதேந்திர தீர்த்த ஸ்ரீபாதங்கலவர்,பரமபூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்த ஸ்ரீபாதங்கலவர், பீடாதிபதி ஸ்ரீ ப.ப.1008 ஸ்ரீ வித்யாராஜேஸ்வர தீர்த்த ஸ்ரீபாதங்கலவர் (ஸ்ரீ பலிமாரு மடம், உடுப்பி) ஆகியோர் சிறப்புற பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கோவை ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ சேவா சங்கத் தலைவர் என்.சுந்தரவடிவேலு, மந்த்ராலயம் ஸ்ரீ ராகவேந்திரா சப்தாஹ காரியச்சரண சமிதியின் மந்த்ராலயேஷ பாதசக்த அர்ச்சகர் ஸ்ரீ பரிமளாச்சார்யா ஆகியோர், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் புனித மஹோத்சவத்தில் பங்கேற்று ஸ்ரீ ராகவேந்திர குருவின் அருளைப் பெறுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும்,ராகவேந்திரா பக்தர்களான நடிகர்கள் ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.