August 28, 2026
தண்டோரா குழு
ஈக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் சார்பில், இந்திய குதிரையேற்ற கூட்டமைப்பின் (Equestrian Federation of India) அங்கீகாரத்துடன் நடத்தப்படும் தேசிய அளவிலான இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் குதிரை தடை தாண்டும் போட்டி கோவையில் தொடங்கியது.இப்போட்டி,கோவை வெள்ளானைப்பட்டி அருகே மோளபாளையத்தில் உள்ள ஈக்வைன் ட்ரீம்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
போட்டியை எஸ்.என்.ஆர். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன்,ஈக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் தலைவர் ஏ.எஸ். சக்தி பாலாஜி, எக்ஸ்போவான் நிறுவனர் டாக்டர் ஆர்.மகேந்திரன், இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சில் வர்த்தக தூதர் டாக்டர் ஆர்.சி.எம். விஷ்ணு பிரபு மற்றும் பங்கேற்கும் அணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
ஆறு மாநிலங்களைச் சேர்ந்த ஆறு அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.ஒவ்வொரு அணியிலும் ஆறு வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், மொத்தம் 54 பேர் போட்டியில் பங்கேற்கின்றனர். சென்னை புல்ஸ் (தமிழ்நாடு),பெகாசஸ் ஸ்போர்ட்ஸ் (கேரளா), கோல்கொண்டா சார்ஜர்ஸ் (தெலங்கானா),பெங்களூரு நைட்ஸ் (கர்நாடகா), எலைட் இக்வெஸ்ட்ரியன்ஸ் (மேற்கு வங்கம்) மற்றும் குவாண்டம் ரெய்ன்ஸ் (கோவா) ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திறமையான குதிரையேற்ற வீரர்கள் இவ்வணிகளில் இடம்பெற்றுள்ளனர்.
தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, குதிரையேற்ற வீரர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் தங்களது திறமைகளையும் சாகசங்களையும் செய்து காட்டினர். போட்டியின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. குதிரைகள் சீறிப்பாய்ந்து தடைகளைத் தாண்டி குதித்த காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
ஆகஸ்ட் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து ஈக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் தலைவர் ஏ.எஸ். சக்தி பாலாஜி கூறுகையில்,
குதிரை தடை தாண்டும் போட்டிகள் 100 செ.மீ., 110 செ.மீ. மற்றும் 120 செ.மீ. என மூன்று பிரிவுகளில் நடைபெறுகின்றன. வீரர்களின் செயல்பாடுகளை, புது தில்லியைச் சேர்ந்த இந்திய குதிரையேற்ற கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நடுவர்கள் மதிப்பீடு செய்கின்றனர். போட்டிக்கான பாதையை ஷார்ஜாவைச் சேர்ந்த போட்டிப் பாதை வடிவமைப்பாளர் வடிவமைத்துள்ளார்.
பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக், தனது முதல் சீசனை 2025 ஜூலை மாதம் வெற்றிகரமாக நிறைவு செய்தது. நாட்டின் சிறந்த குதிரையேற்ற வீரர்களை ஒருங்கிணைத்து, பார்வையாளர்களுக்கு போட்டி நிறைந்த மற்றும் சிறப்பான ஷோ ஜம்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த லீக் உருவாக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 29 ஆம் தேதி) நடைபெறும் போட்டியில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாண்புமிகு அமைச்சர் திரு. வி. சம்பத்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30 ஆம் தேதி) நடைபெறும் போட்டியில் தமிழ்நாடு அரசின் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் எஸ். கமலி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சுகுமாரன், சத்யபாமா, தமிழ்செல்வி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
பரிசளிப்பு விழாவில் திரைப்பட நடிகர்கள் ஆர்யா, ஷ்யாம் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.