September 27, 2026
தண்டோரா குழு
கோவை விளாங்குறிச்சியில் வாகனத் தணிக்கையின்போது போலீசாரை தள்ளிவிட்டு தப்பிய காரை, கோவில்பாளையம் போலீசார் சுமார் 100 கி.மீ. துரத்திச் சென்று அவிநாசியில் சுற்றிவளைத்து பிடித்தனர்.
காரை நிறுத்தாமல் அதிவேகமாக சென்ற நிலையில், தலைமை காவலர் வேல்முருகன் காரின் மீது ஏறி படுத்தபடி தப்பிச் செல்ல விடாமல் கண்காணித்தார். இதனிடையே கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவிநாசி, கருமத்தம்பட்டி உள்ளிட்ட காவல் துறையினர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் இணைந்து வாகனத்தை மடக்கிப் பிடித்தனர்.
சோதனையில் காரில் சுமார் 300 கிலோ குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்த 3 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இந்த சேசிங் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.