• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எரிசக்தி சேமிப்பு கருத்தரங்கில் கலந்து கொள்ள தொழில் நிறுவனங்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

July 17, 2017 தண்டோரா குழு

எரிசக்தி தணிக்கை மற்றும் எரிசக்தி சேமிப்பினை மேம்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு மற்றும் பயிற்சியில் கலந்து கொள்ள தொழில் நிறுவனங்களுக்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் த.ந.ஹரிஹரன் அழைப்பு விடுத்துள்ளார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்தி மற்றும் சேவை நடவடிக்கைகளுக்காக மின்சாரம், நிலக்கரி, விறகுகள், டீசல்போன்ற எரிபொருட்களை அன்றாடம் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றன.

எரிபொருட்களின் இயற்கை வள ஆதாரங்கள் குறைந்து கொண்டே வருவதாலும், தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செலவு அதிகரித்து வருவதாலும், தற்போது எரிபொருள் சேமிப்பு என்பது தவிர்க்க இயலாத நடவடிக்கை ஆகும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களின் எரிசக்தி பயன்பாட்டு திறனை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு, தமிழக அரசு சிறப்புத் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது.

தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் எரிபொருள் தணிக்கையினை செயல்படுத்தி, எரிபொருள் ஆற்றலினை சேமிக்கும் நடவடிக்கையினை ஊக்கப்படுத்தும் வகையில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஒருநாள் கருத்தரங்கம் கோயம்புத்தூர், டவுன்ஹாலில் உள்ள மாவட்ட தொழில் மைய கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இக்கருத்தரங்கில் எரிபொருள் ஆற்றல் தணிக்கை தொடர்பான தொழில்நுட்பங்கள், ஆற்றல் சேமிப்பு நடவடிக்கை தொடர்பான விவரங்கள் தேசிய உற்பத்தி திறன் மற்றும் தேசிய சிறு தொழில் வளர்ச்சி வங்கி சார்ந்த வல்லுநர்களால் விளக்கப்படவுள்ளது.

எரிசக்தி ஆற்றல் தணிக்கை மற்றும் உபகரணங்கள் வாங்கி நிறுவுதல் தொடர்பாக தமிழக அரசு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்தும் இக்கருத்தரங்கில் எடுத்துரைக்கப்படும்.

இந்த கருத்தரங்கில் மானியம் தொடர்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்கனவே மானியம் பெற்று 3 ஆண்டுகள் கழித்து மறுபடியும் விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் ஆகியவை பங்கேற்க தகுதியானவையாகும்.

தொழில் நிறுவனங்கள் எரிசக்தி ஆற்றல் தணிக்கை மற்றும் சேமிப்பு தொடர்பான நுட்பங்களைப் பெற்று, தமது பொருட்களின் உற்பத்தி செலவினை குறைத்து, சந்தை போட்டிகளில் நிலைத்து நின்று, வாகை சூட வருமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு, 9443113825, 9442223823, 8870066684 மற்றும் 9500830498 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க