July 10, 2017
தண்டோரா குழு
நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 17-ம் தேதி கொச்சியில் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்த நடிகை பாவனாவை ஒரு கும்பல் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியது. இது கேரளவில் மட்டுமின்றி திரையுலகினர் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் பல்சர் சுனில் உட்பட 6 பேர் கைது செய்தனர்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் திலீபின் உத்தரவின் பேரிலேயே பாவனா கடத்தப்பட்டார் என்று தகவல்கள் பெரிதாக பேசப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் போலீஸார் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர்.
இதற்கிடையில், கடந்த சில தினங்களாக திலீப்புக்கு நெருக்கமான சில நடிகர்கள் மற்றும் சிறையில் வைத்து பல்சர் சுனிலுக்கு உதவிய சிலரிடமும் விசாரணை நடைபெற்றது.இவர்களிடம் விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் தான் போலீசுக்கு கிடைத்தது. மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் மலையாள நடிகர் திலீப், தூண்டுதலின் பேரில் பாவனாவை கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து நடிகர் திலீப், அவரது மனைவி காவ்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் நடிகர் திலீபிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்ற சதியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததையடுத்து நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர்.