November 16, 2026
தண்டோரா குழு
கோவை கொடிசியா மைதானத்தில் கோயம்புத்தூர் கார் டீலர்கள் சார்பில், 1,000-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்படும் பிரம்மாண்ட கார் விற்பனை மேளா நவம்பர் 19-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த விற்பனை மேளாவில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளன.
சிறிய ரக கார்கள் முதல் பல்வேறு வகையான உயர்தர கார்கள் வரை ஏராளமான கார்கள் ஒரே இடத்தில் இடம்பெற உள்ளதால், கார் வாங்க விரும்பும் பொதுமக்கள் தங்களது விருப்பத்திற்கும், பொருளாதார வசதிக்கும் ஏற்ற கார்களை நேரில் பார்வையிட்டு தேர்வு செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே பயன்படுத்தி வரும் கார்களை மாற்றிக் கொள்ள விரும்புவோருக்கு பரிமாற்ற வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக வாகன ஆவணங்களைச் சரிபார்த்தல், வங்கிக் கடன் பெறுவதற்கான உதவி உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் கார் வாங்கும் நடைமுறைகளை எளிதாக மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விற்பனை மேளா தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்,
கார் டீலர்கள் சங்கத்தைச் சேர்ந்த சஞ்சீவ், அசன்,கல்யாண்,ராஜ்குமார்,செபாஸ்டியன், வினோத்,பாலமுருகன்,ஆனந்த், வெங்கடேஷ்,கோபிநாத்,மணிகண்டன், கார்த்திக், நவமணி,கவாஸ்கர்,ஃபெரோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மேளா குறித்த விவரங்களைத் தெரிவித்தனர்.