November 14, 2026
தண்டோரா குழு
கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் PACT-2026 என்ற பெயரில் கல்வி மற்றும் தொழில்துறை கூட்டாண்மை நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள பாரதியார் அரங்கில் நடைபெற்றது.
‘இணைவோம், ஒத்துழைப்போம், தாக்கத்தை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் டி.ஆர். சரஸ்வதி கண்ணையன்,செயல் செயலாளர் டாக்டர் பிரியா கே.,கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ. பொன்னுசாமி மற்றும் பல்வேறு துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
150-க்கும் மேற்பட்ட தொழில்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வு,மாணவர்களின் கல்வி அறிவுடன் தொழில்துறைக்குத் தேவையான நடைமுறைத் திறன்களையும் வளர்ப்பது, வேலைவாய்ப்புக்குத் தயாரான பட்டதாரிகளை உருவாக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக தொழில்துறை வல்லுநர்களின் வழிகாட்டுதல், சிறப்புப் பயிற்சி வகுப்புகள்,தொழிற்சாலைப் பார்வைகள் மற்றும் உள்ளகப் பயிற்சிகளுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்துவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ.பொன்னுசாமி, இதுபோன்ற தொழில்துறை கூட்டாண்மை நிகழ்வுகள் மூலம் திறமையான மாணவர்களை உருவாக்குவதுடன், அவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்றார்.வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களது அறிவையும் திறன்களையும் உடனுக்குடன் மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும், அதற்கு தொழில்துறை நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெரிதும் உதவும் என்றும் தெரிவித்தார்.
தொழில்துறையின் எதிர்பார்ப்புகளை அறிந்து அதற்கேற்ப மாணவர்களைத் தயார்படுத்துவதே இத்தகைய கூட்டாண்மைகளின் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.