October 30, 2026
தண்டோரா குழு
கோவை PSG மருத்துவமனையில் நோயாளிகள் விழிப்புடன் இருக்கும் நிலையிலேயே மூளைக் கட்டிகளை அகற்றும் (Awake Craniotomy) இரண்டு சிக்கலான அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதன் மூலம் நோயாளிகளின் பேச்சுத்திறன்,மொழியைப் புரிந்துகொள்ளும் திறன் மற்றும் உடல் இயக்கங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இரண்டு பெண் நோயாளிகளுக்கும் மூளையின் இடது பக்க Temporal Lobe பகுதியில், மொழி மற்றும் பேச்சுத் திறனுக்கான முக்கிய மையங்களுக்கு அருகில் மெதுவாக வளரக்கூடிய Low Grade Glioma வகை கட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதில், 45 வயதுடைய பெண் ஒருவர் தொடர்ந்து தலைவலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டிருந்தார்.அவருக்கு கடந்த ஜனவரி 2ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.மற்றொரு 36 வயதுடைய பெண்,இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக அவ்வப்போது தலைவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில்,அவருக்கு கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
வழக்கமான மூளை அறுவை சிகிச்சையைப் போல் முழுமையான மயக்க நிலையில் மேற்கொள்ளாமல், நோயாளிகள் விழிப்புடன் இருக்கும்போதே இந்த அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அறுவை சிகிச்சையின்போது நோயாளிகளிடம் எண்ணுதல், வாக்கியங்களைத் திரும்பக் கூறுதல், படங்களை அடையாளம் காணுதல்,கேள்விகளுக்குப் பதிலளித்தல் மற்றும் கை, கால்களை அசைத்தல் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், நவீன மின் தூண்டுதல் மற்றும் மூளை வரைபடமிடும் தொழில்நுட்பங்கள் மூலம் பேச்சு, மொழி மற்றும் உடல் இயக்கங்களுக்குப் பொறுப்பான முக்கியப் பகுதிகள் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட்டன. இதன் மூலம் இரு நோயாளிகளுக்கும் மூளைக் கட்டிகள் முழுமையாக அகற்றப்பட்டன.
இந்த அறுவை சிகிச்சைகளை Neurosurgery மருத்துவக் குழுவைச் சேர்ந்த டாக்டர்கள் K.S. திருமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் துரைசாமி, வினோத் D., வர்ஷா B. ஆகியோர், Neuroanaesthesiologist டாக்டர் அரவிந்த் அய்யப்பன் ஒத்துழைப்புடன் மேற்கொண்டனர்.
அறுவை சிகிச்சையின்போது நோயாளிகளின் வலியைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் சிறப்பு மயக்கவியல் முறைகள் மற்றும் Scalp Nerve Block தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டன.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரு நோயாளிகளும் இயல்பான பேச்சுத்திறன் மற்றும் கை, கால் இயக்கங்களுடன் நலமுடன் இருந்தனர். அறுவை சிகிச்சைக்கு அடுத்த நாளே நடக்கத் தொடங்கியதுடன், தங்களது அன்றாடப் பணிகளையும் மேற்கொண்டனர். பின்னர் எந்தவிதமான நரம்பியல் பாதிப்புகளும் இன்றி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்.
திசுப் பரிசோதனையிலும் இருவருக்கும் Low Grade Glioma கட்டிகள் என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவக் கண்காணிப்பிலும் இருவரின் உடல்நிலை மற்றும் செயல்பாட்டு மீட்பு சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.
மூளையின் முக்கியச் செயல்பாட்டு மையங்களுக்கு அருகில் உள்ள கட்டிகளை அகற்றும்போது, பேச்சு மற்றும் உடல் இயக்கங்கள் பாதிக்கப்படாமல் சிகிச்சை அளிக்க உதவும் Awake Craniotomy முறையில் PSG மருத்துவமனை பெற்றுள்ள இந்த வெற்றி, கோவையின் மேம்பட்ட நரம்பியல் மருத்துவச் சிகிச்சையில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.