September 19, 2026
தண்டோரா குழு
சிவா டெக்ஸ்யார்ன் லிமிடெட் குழுமத்தின் ஒரு நிறுவனமான ஃபயர்பேர்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் இங்கிலாந்தைச் சேர்ந்த கல்வி வழிகாட்டும் இன்டோ குவாலிஃபிகேஷன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், கோவையில் உள்ள பயர்பேர்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் வளாகத்தில் இன்டோ குவாலிஃபிகேஷன்ஸ் நிறுவனத்தின் பவுண்டேசன் மற்றும் சர்வதேச முதல் ஆண்டு படிப்பு (International Year One) கல்வித் திட்டங்களை மாணவர்கள் பயில முடியும். இன்டோ குவாலிஃபிகேஷன்ஸ் நிறுவனம் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுடன் கல்விப் பாதை ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், மாணவர்கள் தங்களது பவுண்டேசன் அல்லது சர்வதேச முதல் ஆண்டு படிப்பை இந்தியாவிலேயே நிறைவு செய்து, அதன் பின்னர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள ஒப்பந்தம் செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்பின் இரண்டாம் ஆண்டில் சேரும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
இன்டோ குவாலிஃபிகேஷன்ஸ் நிறுவனம் பயர்பேர்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் – ஐ அங்கீகரிக்கப்பட்ட கல்வி மையமாக அங்கீகரித்துள்ளது. இந்தியாவில் கோவையில் இன்டோ பவுண்டேசன் மற்றும் சர்வதேச முதல் ஆண்டு படிப்பை வழங்கும் ஒரே கல்வி நிறுவனமாக பயர்பேர்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் செயல்படுகிறது. இதன் மூலம் வெளிநாடுகளில் இளங்கலைப் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள், முதல் ஆண்டு படிப்பை இந்தியாவிலேயே குறைந்த செலவில் முடித்து, முன்னணி சர்வதேச பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
இன்டோ பல்கலைக்கழகத்தின் கூட்டாமை நிறுவனத்தின் கல்விக் கூட்டாண்மை இயக்குநர் டாக்டர் ரிச்சர்ட் சாமுவேல்ஸ், மாணவர்கள் இந்தியாவில் இந்தப் படிப்புகளை மேற்கொண்டு சர்வதேச பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடரும் நடைமுறை குறித்து விளக்கினார். மேலும், இன்டோ குவாலிஃபிகேஷன்ஸ் நிறுவனத்துடன் கல்விப் பாதை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் மாணவர்களுக்குக் கிடைக்கும் சர்வதேச கல்வி வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
ஃபயர்பேர்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் சுஜனா அபிராமி சுந்தரராமன் பேசுகையில்,
இந்திய மாணவர்களுக்கு சர்வதேச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் வாய்ப்புகளை இந்தியாவிலேயே, குறைந்த செலவில் வழங்குவதற்கான எங்கள் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அமைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்திய வளாகத்திலேயே தரமான கல்வியுடன் சர்வதேச கற்றல் அனுபவத்தை வழங்ககுவதாகவும் தெரிவித்தார்.
பயர்பேர்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ்-ன் தலைமை செயல்பாட்டு அதிகாரி டாக்டர் ஆர். நந்தகோபால், இன்டோ குவாலிஃபிகேஷன்ஸ் திட்டங்களுக்கான சேர்க்கை நடைமுறை மற்றும் பயர்பேர்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ்- இல் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி வசதிகள் குறித்து விளக்கினார். இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சர்வதேச கல்விக்கான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், இத்திட்டம் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு குறைந்த செலவில் சர்வதேச கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும் என்றார்.