September 10, 2026
தண்டோரா குழு
பி.எஸ்.ஜி சன்ஸ் மற்றும் தொண்டு நிறுவனங்களின் கீழ் இயங்கி வரும் பி.எஸ்.ஜி பார்மஸி கல்லூரியின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா கோவையில் நடைபெற்றது.
பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு பி.எஸ்.ஜி சன்ஸ் மற்றும் தொண்டு நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் வே.சங்கர் வரவேற்புரை வழங்கினார்.
ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவ மருந்தியல் மற்றும் மொழிபெயர்ப்பு மருத்துவம், மருந்து மேம்பாட்டு அறிவியல் துறை இயக்குநர் முனைவர் சுப்பிரமணியன் கணேசசுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில்,பி.எஸ்.ஜி பார்மஸி கல்லூரியின் 25 ஆண்டுகாலப் பயணத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் நினைவுகளை உள்ளடக்கிய வெள்ளி விழா நினைவு மலர் வெளியிடப்பட்டது.
மேலும்,கல்லூரியின் வளர்ச்சிக்கு பங்களித்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.மாணவர்களின் திறமை மற்றும் சாதனைகளைப் பாராட்டும் வகையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி, கலை மற்றும் கலாச்சாரம், விளையாட்டு, சமூகச் செயல்பாடுகள் ஆகிய நான்கு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
கல்லூரி முதல்வர் முனைவர் மு. ராமநாதன் நன்றியுரை வழங்கினார்.ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் 25 ஆண்டுகால பங்களிப்புகளையும் சாதனைகளையும் சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிறைவு விழா, பி.எஸ்.ஜி பார்மஸி கல்லூரியின் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.