August 12, 2026
தண்டோரா குழு
த.வெ.க அரசு இந்துக்களுக்கு இடைஞ்சல் செய்யவில்லை என்றாலும், தங்களை கிறிஸ்துவர்களாக அடையாளபடுத்தி கொள்வதில் தெளிவாக இருக்கிறார்கள் – இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார்.
கோவை லைட் ஹவுஸ் பகுதியில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் நடைபெற்ற ஆடி மாத மஞ்சள் நீர் அபிஷேக விழாவில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆடி மாத மஞ்சள் நீர் அபிஷேக விழா தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருவதாகவும், 600-க்கும் மேற்பட்ட இடங்களில் மஞ்சள் நீர் தீர்த்த கலச நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.ரம்ஜான் பண்டிகைக்கு அரசு சார்பில் அரிசி வழங்கப்படுவது போன்று, அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவதற்கும் அரசு உதவ வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதாகவும், தமிழக அரசு இதனை பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறினார்.
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டதாகவும், சிறிய விநாயகர் சிலைகள் சுமார் 15 லட்சம் இடங்களில் வைக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், இந்த ஆண்டு அதைவிட அதிகமான சிலைகள் வைக்கப்படும் என்றார். கோவையில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
“தமிழர் பண்பாடும், சனாதன இந்து மதமும் ஒன்றே என்ற தலைப்பில் இந்த ஆண்டு விநாயகர் சதிர்த்தி விழா நடைபெரும் எனக் குறிப்பிட்ட அவர், இந்த ஆண்டு ராமகோபாலன் ஜியின் 100-வது ஆண்டு விழா நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான ஆட்சி வழங்கப்படும் என தமிழக அரசு பதவியேற்கும் போது தெரிவித்து இருந்ததாகவும், அது நடைமுறையில் எவ்வாறு இருக்கும் என்பதை வரும் காலம்தான் பதில் சொல்லும் என்றும் அவர் கூறினார்.
தமிழக அரசு இந்து மதத்திற்கு நேரடியாக இடையூறு செய்யவில்லை என்றாலும், கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாக செயல்படுவது போன்ற தோற்றம் இருப்பதாக அவர் விமர்சித்தார். அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் தங்களது கிறிஸ்தவ அடையாளத்தை பெருமையாக வெளிப்படுத்துவதாகவும், சபாநாயகர் பைபிள் படிப்பதாகவும் அவர் கூறினார்.அதேநேரத்தில், போராட்டங்கள் உள்ளிட்ட ஜனநாயக நடவடிக்கைகளுக்கு அரசு உரிய முறையில் அனுமதி அளித்து வருவதை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது வரவேற்கத்தக்கது என்றும், கோவில்களுக்கு வரும் பெண்கள் மற்றும் ஆண்கள் தேவையில்லாமல் செல்போன்களில் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க செல்போன் தடையை வரவேற்கலாம் என்றார்.தமிழகம் முழுவதும் கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதாகவும், சில கோவில் நிலங்களில் கிறிஸ்தவ கல்லூரிகள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்டவை இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து ஏற்கனவே முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிடம் தெரிவித்ததாகவும், அப்போது சந்திக்க நேரம் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்.தற்போதைய அரசிடம் இந்த விவகாரங்களை தெரிவிக்க தயாராக இருப்பதாகவும், சில இடங்களில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து இருப்பதை பாராட்டுவதாகவும், அதேநேரத்தில் இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது போன்று, தமிழக அரசு சார்பில் விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
உடன் மாநில அமைப்பாளர் குருகுலம் ராஜேஷ் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட தலைவர் மகேஸ்வரி மாவட்டச் செயலாளர்கள் பிரேமலதா பிரியா சத்யா கல்பனா மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி மகேஸ்வரன் சோமசுந்தரம் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய அன்னையர் முன்னணி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.