September 25, 2026
தண்டோரா குழு
தொழில்முனைவோர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கிடையே வர்த்தக வாய்ப்புகள், தொழில் ஒத்துழைப்புகள் மற்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்படும் Chamber of Trade & Enterprises (CoTE) அமைப்பின் தேசிய அளவிலான தொடக்க விழா கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள Coimbatore Club சந்திப்பு அரங்கில் வெள்ளிக்கிழமை (25.09.2026) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், உடுமலை மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் CoTE-யின் கிளைகள் தொடங்கப்பட்டு, அவற்றுக்கான ஒருங்கிணைப்பாளர்களும், நிர்வாகிகளும் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர்.
“CoTE Connect” மொபைல் செயலி அறிமுகம்
விழாவின் முக்கிய நிகழ்வாக, CoTE உறுப்பினர்களுக்கான பிரத்யேக மொபைல் செயலியான “CoTE Connect” அறிமுகம் செய்யப்பட்டது.இந்த செயலியின் மூலம் உறுப்பினர்கள் அரசு சார்ந்த தொழில் வாய்ப்புகள் மற்றும் அறிவிப்புகளை அறிந்து கொள்வது, ஒருவருக்கொருவர் தொழில் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வது, நிறுவனங்களின் கிளைகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விரிவுபடுத்துவதற்கான தொடர்புகளை உருவாக்குவது, கூட்டாக கொள்முதல் செய்வது, தொழிலுக்குத் தேவையான ஆலோசகர்களை அணுகுவது மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வது போன்ற பல்வேறு வசதிகளைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டது.
IBTC பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்
தொடர்ந்து, CoTE-யின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளுடன் இணைந்து செயல்படும் International Board of Trainers & Coaches (IBTC) அமைப்பின் பயிற்சியாளர்களுக்கான Train the Trainer பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.தொழில்முனைவோர்களின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் வளர்ச்சிக்கு தேவையான பயிற்சிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுப் பகிர்வை தொடர்ந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
விழாவில் KG Hospital குழுமங்களின் தலைவர் டாக்டர் பக்தவச்சலம்,ராமச்சந்திரா மருத்துவமனை குழுமங்களின் தலைவர் ராம், உதயம் குழுமங்களின் தலைவர் M.K.G. ஆனந்தகுமார், U.I.T. Institute குழுமங்களின் தலைவர் சண்முகம், அமெரிக்க வாழ் இந்தியர் அருள்நாதன், லயன்ஸ் சங்கங்களின் முன்னாள் ஆளுநர் ராஜசேகர், வரும் ஆண்டின் ஆளுநர் வழக்கறிஞர் சூரி நந்தகோபால், StartupTN கோவை திட்ட அலுவலர் காயத்ரி மற்றும் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அவர்கள் தொழில்முனைவோர்களின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு வாய்ப்புகள், தொழில் விரிவாக்கம், நிதி சார்ந்த வசதிகள், அரசு திட்டங்கள் மற்றும் தொழில்துறை வளர்ச்சி தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர்.
நிகழ்வில் CoTE அமைப்பின் நிறுவனர் மற்றும் MMP Group நிறுவனங்களின் தலைவர் M.M.பிரபு, முதன்மை நிதி அதிகாரி ஆடிட்டர் குமரேஷ் பாபு, முதன்மை ஆலோசகர் மற்றும் Accenture நிறுவன துணைத் தலைவர் V.P. பிரசன்னா, முதன்மை அமைப்பாளர் மற்றும் Gracia Counselling நிறுவன நிறுவனர் டாக்டர் ராபர்ட், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் செயல் இயக்குனர் திரு. பிரபு ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேசிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
CoTE-யின் தேசிய ஒருங்கிணைப்பாளராக தினேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தேசிய கிளை இயக்குனர்களாக சிந்தியா பெனடிக்ட்,விக்னேஷ்,ராஜேஷ், கலைவாணன்,சிந்தியா தம்பிதுரை தமிழ் செல்வன் மற்றும் அங்குராஜ் உள்ளிட்டோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பல்வேறு பிரிவுகளுக்கான பொறுப்பு நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டு, தங்களது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.
தொழில்முனைவோர்களை ஒரே தளத்தில் இணைத்து, வர்த்தக வாய்ப்புகள், தொழில் கூட்டாண்மை, அறிவுப் பகிர்வு, தொழில்நுட்பம் மற்றும் தேசிய அளவிலான தொழில் விரிவாக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் CoTE செயல்படும் என அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.