• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காலநிலை மாற்றச் சவால்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து ‘நாட்கான்-2026’ மாநாட்டில் ஆலோசனை

July 23, 2026 தண்டோரா குழு

அசோசியேஷன் ஆஃப் கன்சல்டிங் சிவில் இன்ஜினீயர்ஸ் (இந்தியா) சார்பில் நடத்தப்படும் தேசிய சிவில் பொறியாளர்கள் மாநாடான நாட்கான்-2026 (NATCON 2026)-இன் நான்காவது பதிப்பு கோவையில் வியாழக்கிழமை தொடங்கியது.

ஜூலை 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த இருநாள் மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல முன்னணி சிவில் பொறியியல் வல்லுநர்கள் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டின் தலைவர் சி.ஜே.ரகுநாதன் தொடக்க உரையில் பேசியதாவது:

”ஒவ்வொரு காலகட்டமும் அது உருவாக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் கட்டடங்களால் அடையாளம் காணப்படுகிறது. சமூக வளர்ச்சியில் சிவில் பொறியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அதிகரித்து வரும் நகரமயமாக்கலும் உள்கட்டமைப்பு வளர்ச்சியும் புதிய சவால்களை ஏற்படுத்தி வருகின்றன. புத்தாக்கம் மிக்க, நிலைத்தன்மை வாய்ந்த மற்றும் பேரிடர்களைத் தாங்கும் திறன் கொண்ட கட்டமைப்புகள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், இயற்கை வளங்களை பொறுப்புடன் பயன்படுத்தும் பண்பாட்டையும் இந்த மாநாடு ஊக்குவிக்கும். உருவாகி வரும் சவால்களை எதிர்கொள்வதற்கான அறிவுப் பகிர்வு மற்றும் கருத்துப் பரிமாற்றத்திற்கு இந்த மாநாடு சிறந்த தளமாக அமையும்” என்றார்.

அசோசியேஷன் ஆஃப் கன்சல்டிங் சிவில் இன்ஜினீயர்ஸ் (இந்தியா) தேசியத் தலைவர் ராஜேந்திர கல்பாவி ராவ் தலைமை உரையில் பேசுகையில்,

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு (AI), முப்பரிமாண அச்சிடுதல் (3D Printing) உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் கட்டுமானத் துறையில் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளன என்றார். தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் சிவில் பொறியாளர்கள் தங்களது முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அசோசியேஷன் ஆஃப் கன்சல்டிங் சிவில் இன்ஜினீயர்ஸ் (இந்தியா) கோவை மையத்தின் தலைவர் பி.பரமேஸ்வரன், சர்வதேச வல்லுநர்கள் பங்கேற்கும் இத்தகைய பிரம்மாண்டமான சிவில் பொறியாளர்கள் மாநாட்டை கோவையில் நடத்துவதில் பெருமை கொள்வதாகத் தெரிவித்தார்.

மாநாட்டின் சிறப்பு விருந்தினரும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான ஆர்.சுரேஷ்குமார், புராண காலம் முதல் சிவில் பொறியியலின் சிறப்பை எடுத்துரைத்தார். கரிகால சோழன் கட்டிய கல்லணை, ராஜராஜ சோழன் எழுப்பிய தஞ்சை பெரிய கோயில் ஆகியவை நமது முன்னோர்களின் பொறியியல் திறமைக்கு சான்றுகளாக விளங்குகின்றன என்றார். நிலைத்தன்மை வாய்ந்த கட்டடங்கள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, நாட்கான்-2026 மாநாட்டு நினைவு மலரை ஆர்.சுரேஷ்குமார் வெளியிட அதன் முதல் பிரதியை அசோசியேஷன் ஆஃப் கன்சல்டிங் சிவில் இன்ஜினீயர்ஸ் (இந்தியா) பொதுச் செயலாளர் ஏ.காசிராம் பெற்றுக்கொண்டார்.

மேபால் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி. ஸ்ரீபதி, “ஸ்மார்ட், சஸ்டெயினபிள், ரெசிலியன்ட்” என்ற மாநாட்டின் கருப்பொருள் தற்போதைய காலகட்டத்துக்கு மிகவும் பொருத்தமானது என்றார். பசுமைக் கட்டடங்கள், வளச் சிக்கனம் மற்றும் மறுசுழற்சி வசதிகளுடன் கூடிய பணிச்சூழலை உருவாக்குவதில் தங்களது நிறுவனம் முன்னோடியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்திய அறிவியல் கழகம் பெங்களுர் பேராசிரியர் டாக்டர் மாதவி லதா காலி, உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே வளைவு பாலம் அமைப்பதில் எதிர்கொண்ட தொழில்நுட்பச் சவால்கள் குறித்து விளக்கினார். காஷ்மீரை கன்னியாகுமரியுடன் ரயில் மூலம் இணைக்கும் தேசியக் கனவு நனவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாநாட்டில் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல்வேறு ஆசிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி வல்லுநர்கள் பல்வேறு தொழில்நுட்ப அமர்வுகளில் உரையாற்ற உள்ளனர்.

மேலும் படிக்க