September 3, 2026
தண்டோரா குழு
23 வயதுடைய 34 வார கர்ப்பிணிப் பெண் கடுமையான வயிற்றுவலி மற்றும் தொடர் வாந்தி பிரச்சனை காரணமாக பல மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்பட்டு உரிய தீர்வு கிடைக்காத நிலையில் கோவை அவிநாசி ரோட்டிலுள்ள கேஎம்சிஹெச் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு மருத்துவர்கள் செய்த பரிசோதனைகளில் அவருக்கு பிறவியிலேயே சிறுகுடல் தன்னைத்தானே ஒரு வளையம் போல் சுற்றிக்கொண்டு அடைப்பை ஏற்படுத்தும் குறைபாடு கண்டறியப்பட்டது. அது மட்டுமல்லாமல் இரத்த நாளத்திலும் அடைப்பு இருந்தது.
கர்ப்ப காலத்தில் இத்தகைய பாதிப்பு மிகவும் அரிதானதுடன், உடனடி சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் தாய் மற்றும் கருவில் உள்ள குழந்தை ஆகிய இருவரின் உயிருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அவசரநிலையாகும். இதையடுத்து, மகப்பேறு மருத்துவம், பொது மற்றும் குடலியல் அறுவை சிகிச்சை மருத்துவம், மயக்கவியல், பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளைச் சேர்ந்த பல்துறை மருத்துவக் குழுவினர் இணைந்து அவசர அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
அறுவை சிகிச்சையின்போது, சிக்கலான மற்றும் ஆபத்தான சிறுகுடல் சரிசெய்யப்பட்டு, குடலின் இரத்த ஓட்டம் முழுமையாக மீட்கப்பட்டது.இதனால் பெருமளவு சிறுகுடலை அகற்ற வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டு, குடல் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டது. தொடர்ந்து, தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெற்றிகரமான சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தாயும் பிறந்த குழந்தையும் சிறப்பான முறையில் குணமடைந்து, தற்போது முழு உடல்நலத்துடன் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி கூறுகையில்,
“மிகவும் அரிய மற்றும் சிக்கலான இந்த மருத்துவச் சவாலை எதிர்கொண்டு, தாய் மற்றும் சேய் இருவரின் உயிரையும் வெற்றிகரமாகக் காப்பாற்றிய பொது மற்றும் லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மருத்துவர் ஸ்ரீ விஷ்ணு துளசிராமன், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர் பிரியா பாரி, பச்சிளம் குழந்தை நல மருத்துவர் ஸ்ரீனிவாசன் மற்றும் மயக்கவியல் மருத்துவர் தினேஷ் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நவீன மருத்துவ வசதிகள் மற்றும் துல்லியமான திட்டமிடல் மூலம் சாத்தியமான இந்த வெற்றி, நமது மருத்துவமனையின் அர்ப்பணிப்பிற்கு மற்றொரு சிறந்த சான்றாகும்” என்று கூறினார்.
“கர்ப்பிணிப் பெண்ணிற்கு, பல்வேறு துறை மருத்துவர்கள் ஒருங்கிணைந்து உடனடியாகச் செயல்பட்டுச் சிகிச்சை அளித்த விதம் மிகவும் போற்றத்தக்கது. தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பியது முழு மருத்துவக் குழுவின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்.சாதனை படைத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று கேஎம்சிஹெச் மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.
அதிக ஆபத்துள்ள கர்ப்பங்கள் மற்றும் கர்ப்ப காலத்தில் சிலருக்கு தேவைப்படும் சிக்கலான அவசரநிலை அறுவை சிகிச்சைகளை, உலகத் தரத்திலான பல்துறை ஒருங்கிணைந்த சிகிச்சை முறையில் கையாள்வதில் கேஎம்சிஹெச் மருத்துவமனை தொடர்ந்து முன்னணி மருத்துவமனையாக விளங்கி வருகிறது. இவ்வெற்றிகரமான சிகிச்சை,அரிய மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்களையும் தாய் மற்றும் சேய் இருவரின் நலனையும் ஒருங்கிணைத்து சிறப்பாக கையாளும் கேஎம்சிஹெச் மருத்துவமனையின் மருத்துவத் திறனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.