July 17, 2026
மு, சிராஜ்தீன் இயற்கை ஆர்வலர் - WNCT
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16-ஆம் தேதி உலக பாம்புகள் தினம் (World Snake Day) உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இயற்கைச் சூழலில் பாம்புகள் வகிக்கும் முக்கிய பங்கையும்,அவற்றின் பாதுகாப்பின் அவசியத்தையும், பாம்புகள் குறித்த அறிவியல் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
பாம்புகள் மனிதர்களின் எதிரிகள் அல்ல; இயற்கையின் இன்றியமையாத அங்கமாகும்.குறிப்பாக விவசாய நிலங்களில் பயிர்களை அழிக்கும் எலிகள் உள்ளிட்ட சிறிய உயிரினங்களின் எண்ணிக்கையை இயற்கையான முறையில் கட்டுப்படுத்துவதன் மூலம் விவசாயத்திற்கும்,உணவுப் பாதுகாப்பிற்கும், சுற்றுச்சூழல் சமநிலைக்கும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்குகின்றன.
பாம்புகள் இல்லாத சூழலில் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து, விவசாய உற்பத்திக்கும், பொதுச் சுகாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
உலக சுகாதார நிறுவனம் (WHO) பாம்புக்கடியை உலகளவில் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களில் (Neglected Tropical Disease) ஒன்றாக அங்கீகரித்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 64,000 பேர் பாம்புக்கடியால் உயிரிழக்கின்றனர் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த உயிரிழப்புகளுக்குப் பாம்புகளே முழுமையான காரணம் அல்ல. மாறாக, பாம்புகள் குறித்த அறிவியல் புரிதல் இல்லாமை, மூடநம்பிக்கைகளை நம்புவது, தாமதமாக மருத்துவமனைக்குச் செல்வது மற்றும் முதலுதவி குறித்த தவறான நடைமுறைகளே முக்கிய காரணங்களாகும்.
நம் சமூகத்தில் பாம்புகளைப் பற்றிய பல தவறான நம்பிக்கைகள் இன்னும் நிலவுகின்றன. பாம்பு பழிவாங்கும், பால் குடிக்கும், மனிதர்களைத் தேடிச் சென்று தாக்கும், இசைக்கு ஆடும் போன்ற நம்பிக்கைகளுக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. பெரும்பாலான பாம்புகள் மனிதர்களைக் கண்டாலே விலகிச் செல்ல முயற்சிக்கின்றன. அவை தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று உணரும்போது மட்டுமே தற்காப்புக்காகக் கடிக்கின்றன.
தமிழ்நாட்டில் காணப்படும் பெரும்பாலான பாம்புகள் விஷமற்றவை. மிகச் சில இனங்கள் மட்டுமே அதிக விஷத்தன்மை கொண்டவை. எனவே எந்தப் பாம்பையும் கண்டவுடன் அச்சத்தில் கொல்வதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, வனத்துறை அல்லது பயிற்சி பெற்ற பாம்பு மீட்பாளர்களுக்குத் தகவல் தெரிவித்து, பாம்புகளை பாதுகாப்பாக மீட்டு அவற்றின் இயற்கை வாழிடங்களில் விடுவிக்க வேண்டும்.
பாம்புக்கடி ஏற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்டவரை அமைதியாக வைத்திருந்து, அருகிலுள்ள அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் செல்ல வேண்டும். விஷ எதிர்ப்பு மருந்து (Anti Snake Venom – ASV) மட்டுமே அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட சிகிச்சையாகும். காயத்தை வெட்டுதல், விஷத்தை உறிஞ்சுதல், கயிறு இறுக்கமாகக் கட்டுதல், மந்திரம், மூலிகை அல்லது பிற அறிவியல் ஆதாரமற்ற சிகிச்சைகளை நம்புவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
இன்று நகரமயமாக்கல், வாழிட அழிவு, சாலை விபத்துகள், சட்டவிரோத வேட்டை மற்றும் மனிதர்களின் அச்சம் ஆகியவற்றால் பாம்புகளின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டு வருகிறது. பாம்புகளைப் பாதுகாப்பது என்பது ஒரு உயிரினத்தை மட்டும் காப்பது அல்ல; முழு சுற்றுச்சூழல் சமநிலையையும் பாதுகாப்பதாகும்.
உலக பாம்புகள் தினத்தை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள், சமூக அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இணைந்து பாம்புகள் குறித்த அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மூடநம்பிக்கைகளை ஒழித்து, அறிவியல் சிந்தனையை வளர்ப்பதன் மூலம் மட்டுமே மனித உயிர்களையும், பாம்புகளையும், இயற்கையையும் பாதுகாக்க முடியும்.
“பாம்புகளைப் புரிந்துகொள்வோம்…
மூடநம்பிக்கைகளை ஒழிப்போம்…
இயற்கைச் சமநிலையைப் பாதுகாப்போம்…!”
மு, சிராஜ்தீன்
இயற்கை ஆர்வலர் – WNCT