June 2, 2026
தண்டோரா குழு
மே 31-ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புகையிலையற்ற ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உறுதியேற்கும் வகையிலும் ஒரு கையெழுத்து இயக்க நிகழ்ச்சியை மருத்துவமனை வளாகத்தில் நடத்தியது.
உலகளவில் தவிர்க்கக்கூடிய மரணங்களுக்கும் நோய்களுக்கும் புகையிலை பழக்கமே மிக முக்கியக் காரணமாக உள்ளது. இது நாள்பட்ட சுவாச நோய்கள், இதய பாதிப்புகள் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்களை ஏற்படுத்தி மனித உயிர்களுக்குப் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது.
புகையிலையினால் ஏற்படும் ஆபத்துகளை மக்கள் புரிந்து கொண்டு, அப்பழக்கத்திலிருந்து உடனடியாக விடுபட வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த கையெழுத்து இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
கே.எம்.சி.ஹெச் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் உலகத்தரம் வாய்ந்த நுரையீரல் சிகிச்சை மற்றும் புகையிலை மீட்பு சேவைகளை வழங்கி வருகிறது. துல்லியமான கதிர்வீச்சு சிகிச்சை வசதியும் PET-CT போன்ற அதிநவீன நோய் கண்டறியும் வசதிகளும் இங்கு உள்ளன.
பல்துறை நிபுணர்களைக் கொண்டு மேம்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சை, துல்லியமான கதிர்வீச்சு சிகிச்சை, ரோபோடிக் அறுவை சிகிச்சை மற்றும் ‘கீமோ எம்போலைசேஷன்’ (Chemo embolization) முதலான நவீன சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இரத்தப் புற்றுநோய் சிகிச்சை மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையிலும் கே.எம்.சி.ஹெச் சிறந்து விளங்குகிறது.
இது குறித்து கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி கூறுகையில்:
“புகையிலை பழக்கம் என்பது ஒரு தீவிரமான உடல்நலப் பாதிப்பு. இதிலிருந்து விடுபட முறையான மருத்துவ உதவியும், அன்பான ஆதரவும் தேவை. கேம்சிஹெச்-இல் இதற்கான சிறப்பு ஆலோசனைகள், மேம்பட்ட பரிசோதனைகள் மற்றும் தனிப்பட்ட சிகிச்சை முறைகள் மூலம் நோயாளிகள் விரைவில் குணமடைய நாங்கள் முழுமையான சேவைகளை வழங்குகிறோம்,” என்றார்.
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி கூறுகையில்:
“இந்த கையெழுத்து இயக்கம் என்பது ஆரோக்கியமான வாழ்விற்காகப் பொதுமக்கள் ஏற்கும் ஒரு கூட்டு உறுதியாகும். ஆரோக்கியமான வாழ்வை மீட்டெடுக்கத் தேவையான அனைத்து அதிநவீன மருத்துவ வசதிகளும், சம்பத்தப்பட்ட துறைகளும் எங்களிடம் தயாராக உள்ளன,” என்றார்.