June 2, 2026
தண்டோரா குழு
மத்திய அரசு தமிழ்நாட்டில் 11% இறக்குமதி வரியில் இருந்து பருத்திக்கு தற்காலிக விலக்கு அளித்துள்ளதற்கு தென்னிந்திய பஞ்சாலை சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
சைமாவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் கூட்டத்தில் இந்திய ஜவுளி சம்மேளன (சிட்டி) தலைவர் திரு. அஸ்வின் சந்திரன், பருத்தி ஜவுளி ஏற்றுமதி கழக (டெக்ஸ்ப்ரோசில்) துணை தலைவர் ரவி சாம், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் துரை பழனிசாமி, துணை தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் சைமா பொது செயலாலர் Dr.க.செல்வராஜு ஆகியோர் ஒட்டுமொத்த ஜவுளி துறையின் சார்பாக பருத்தி இறக்குமதி தற்காலிக வரி விலக்கிற்கு மத்திய அரசிற்கும் அதற்கு பரிந்துரை செய்த தமிழக அரசிற்கும் தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி, மாண்புமிகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்,வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்,ஜவுளி துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோருக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்.
குறிப்பாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பொறுப்பேற்றதுடன் தாமாக முன்வந்து முதல் கோரிக்கையாக பாரத பிரதமர் அவர்களுக்கு 11 சதவீத வரி நீக்கத்தை வலியுறுத்தி பரிந்துரை செய்து உடனடியாக நிவாரணம் கிடைக்க பெரிதும் உதவியமைக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்.
பருத்தி ஜவுளி ஏற்றுமதிக்கு வரியில்லா ஒப்பந்தம்,சாதகமான உலக சந்தை நிலவரம் மற்றும் அரசின் பல்வேறு ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கைகளினால் ஒரு சிறந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது ஆனால் தரமான மற்றும் வாடிக்கையாளர் குறிப்பிடும் நாட்டின் பஞ்சு உலக சந்தையை விட 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் பருத்தி விலை நிலவி வந்ததால் இந்திய ஜவுளி துறை இந்த சாதகமான சூழ்நிலையை பயன்படுத்த முடியவில்லை.
ஜூன் 1, 2026 முதல் அக்டோபர் 31, 2026 வரை 11 சதவீத வரி விலக்கு அளித்து மே 30, 2026 அன்று அறிவிக்கப்பட்டுள்ள அரசு ஆணையின் மூலம் ஒரு சாதகமான சூழ்நிலை பருத்தி பருவமில்லாத காலத்தில் பஞ்சு பற்றாக்குறையையும் தரமான பஞ்சு தேவையையும் பூர்த்தி செய்ய பெரிதும் உதவும் என்று ஜவுளி துறையினர் தெரிவித்தனர்.
இந்தியாவில் உள்ள நூற்பாலைகள் அனைத்தும் தற்போது இறங்க துவங்கியுள்ள பஞ்சு விலையினால் பருத்தி நூலிலும் விலையை குறைத்து ஒட்டுமொத்த ஜவுளி துறையும் குறிப்பாக ஏற்றுமதியாளர்கள் தங்கள் ஒப்பந்தத்தை சிரமமின்றி பூர்த்தி செய்திடவும் புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்தவும் உதவும் என்று சிட்டி, டெக்ஸ்ப்ரோசில் மற்றும் சைமா தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வரி நீக்கம் ஒரு நிலையான போட்டித்திறனை கொண்டுவந்து விரைவில் அமலாக உள்ள பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இதர வரியில்லா ஒப்பந்தங்களின் பயனை அடைய உதவும் என்று கூறினார்.
பருத்தி நூல் உற்பத்தி செலவில் 65% ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்களின் உற்பத்தி செலவில் 25% முதல் 30% செலவை கொண்டுள்ளது. சுமார் 8 கோடி கிராமப்புற மக்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும் ஜவுளி தொழிலுக்கு தரமான பஞ்சு உரிய விலையில் எப்போதும் கிடைத்திட வேண்டும் என்பது அவசியமாகும்.
மத்திய அரசு உலகிலேயே மிக குறைந்த பருத்தி உற்பத்தியான ஒரு ஹெக்டர்க்கு 430 கிலோ விளைச்சலை அதிகரிக்காமல் இறக்குமதி வரி ஒட்டுமொத்த ஜவுளி துறையையும் அதை நம்பியுள்ள விவசாயிகளின் எதிர்காலத்தியும் பாதிக்கும் என்று கூறினர். சுமார் 38% பருத்தி விளைச்சல் நிலத்தை தன்னக படுத்தியுள்ள இந்தியா உலக பருத்தி விளைச்சலில் சுமார் 19% மட்டுமே கொண்டுள்ளது. இதை உயர்த்திட தற்போது ரூ. 5659 கோடி நிதியுடன் அறிவிக்கப்பட்டுள்ள பருத்தி உற்பத்தி திட்டம் நடைமுறைக்கு வந்து நாடு தன்னிறைவு எட்ட பல்வேறு சிக்கல்களால் குறைந்தது பத்து ஆண்டுகள் ஆகும்.
பருத்தி விவசாயிகளுக்கு மாற்று பயிர்கள் இருப்பதாலும் போதிய குறைந்த நிர்ணய விலை உள்ளதாலும், 11% தற்காலிக இறக்குமதி வரி எந்த வித பயனையும் அளிப்பதில்லை என்று கூறினர்.அரசு தற்போது எடுத்துள்ள வரி நீக்கம் ஓரளவிற்கு நிவாரணத்தை கொடுத்துள்ள போதிலும் குறைந்தபட்சம் 2030 வரை பருத்தி பருவமற்ற காலத்தில் (ஏப்ரல் – அக்டோபர்) இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்பட்டால் இந்திய ஜவுளி துறை 2030 க்கு ஜவுளி துறை நிர்ணயித்துள்ள 350 பில்லியன் அமெரிக்கா டாலர் வியாபாரத்தையும், 100 பில்லியன் அமெரிக்கா டாலர் ஏற்றுமதியையும், 100 பில்லியன் அமெரிக்கா டாலர் புதிய முதலீடுகளையும் அடைந்து சுமார் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த உதவும் என்று ஜவுளி துறையினர் தெரிவித்தனர்.
பருத்தி ஜவுளி ஏற்றுமதியில் நமது போட்டி நாடுகளான பங்களாதேஷ், வியட்நாம், பாக்கிஸ்தான், இந்தோனேஷியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் இறக்குமதி வரி இல்லாத காரணத்தினால் இந்திய விற்கு கிடைக்க வேண்டிய ஏற்றுமதி வாய்ப்பை தட்டிச்செல்வத்தினாலும் சுமார் 30 முதல் 40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படுகிறது. இந்த ஆண்டு அறிவித்த இந்த தற்காலிக வரி நீக்கத்தால் இந்த சூழ்நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.