May 8, 2026
தண்டோரா குழு
கோவை அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர் ஓட்டலில், கோடை காலத்தை முன்னிட்டு ‘கோ கிளாம்’ சிறப்பு விற்பனை கண்காட்சி வியாழக்கிழமை கோலாகலமாக துவங்கியது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், நகைகள், அழகு சாதனங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.
கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஷாப்பிங் விரும்பும் பெண்கள் மத்தியில் தனித்துவமான வரவேற்பைப் பெற்றுள்ள ‘கோ கிளாம்’ நிறுவனம், கடந்த 11 ஆண்டுகளாக பல்வேறு பண்டிகை மற்றும் சீசன் காலங்களில் விற்பனை கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான கோடை கால மெகா கண்காட்சி மே 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நவீன ஆடைகள், பரிசுப் பொருட்கள், வீட்டு உபயோக மற்றும் அலங்காரப் பொருட்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், வாசனை திரவியங்கள், இயற்கை முறையிலான அழகு சாதனங்கள், சிகை மற்றும் முக அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்கள் பார்வையாளர்களை கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக கோடை காலத்திற்கு ஏற்ற பேஷன் ஆடைகள் மற்றும் புதிய வடிவமைப்புகள் அதிக கவனம் பெற்றன.
கண்காட்சி துவக்க விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அனுபமா சிவம், அகிலா கார்த்திக்,சாரு ரவிச்சந்திரன், பவிகா துருவ் தேசாய்,விவி வினு ஆகியோர் பங்கேற்று கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல் கூறுகையில்,
“இந்த ஆண்டு கோடை கால சிறப்பு விற்பனை கண்காட்சியாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில், குடும்பங்களுக்கு தேவையான பல்வேறு தரமான பொருட்கள் ஒரே இடத்தில் சிறப்பு தள்ளுபடியில் கிடைக்கின்றன. மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது,” என்றனர்.
மேலும் கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நாமக்கல், உதகை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஆண்டுதோறும் ‘கோ கிளாம்’ கண்காட்சிக்கு வருகை தந்து ஆர்வமுடன் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.