August 6, 2026
தண்டோரா குழு
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இலவச செயற்கை மூட்டு பொருத்தும் முகாம் கோவையில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான தகவல் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ராஜஸ்தானி அரங்கில் நடைபெற்றது.
இந்த முகாம் கோவையில் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது.இதற்காக கடந்த மே மாதம் நடைபெற்ற அளவீட்டு முகாமில் பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது இலவசமாக செயற்கை கால் மற்றும் கைகள் பொருத்தப்பட உள்ளன.
செய்தியாளர்களை சந்தித்த முகாம் ஒருங்கிணைப்பாளர் அச்சால் சிங் பட்டீ (Achal Singh Bhati) மற்றும் சமூக செயற்பாட்டாளர் சந்தோஷ் முந்த்ரா ஆகியோர் கூறுகையில்,
தமிழ்நாடு,கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்.வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி, கோவை சோமையாம்பாளையம், கே.என்.ஜி. புதூர் பிரிவு,தடாகம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மகேஷ்வரி பவான் வளாகத்தில் முகாம் நடைபெறுகிறது. இதில் ஜப்பான்–ஜெர்மன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 3D Printed Narayan Modular செயற்கை கால் மற்றும் கைகள், தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் பயனாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், Matrushree Shantaben Tribhuvandas Patel Charitable Trust அறக்கட்டளையுடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்படுவதாகவும், நவீன தொழில்நுட்ப உதவியுடன் மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடனும் சுயநிறைவு வாழ்க்கையுடனும் வாழ உதவுவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முகாம் தொடர்பான தகவல் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முகாம் ஒருங்கிணைப்பாளர் அச்சால் சிங் பட்டீ, சமூக செயற்பாட்டாளர் சந்தோஷ் முந்த்ரா, மகேஷ்வரி சபா தலைவர் தாமோதர் பிரசாத் சோமானி, ஜிதேந்திரா புகாலியா, பிரதீப் கர்னானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.