May 7, 2026
தண்டோரா குழு
பார்க் கல்விக் குழுமத்தின் கீழ் செயல்படும் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (PCET), பார்க் தொழில்நுட்பக் கல்லூரி (PCT), தமிழ்நாடு பொறியியல் கல்லூரி (TCE) ஆகியவை இணைந்து நடத்திய இரண்டு நாள் கல்லூரிகளுக்கிடையேயான கலாச்சார விழா “ஜீரோ ஜி 2026” கனியூர் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
மே 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த விழாவில்,தமிழ்நாடு முழுவதும் உள்ள 22 கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று 30-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் கலாச்சாரப் போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய இசை மற்றும் உற்சாகமான மாணவர் பங்கேற்பால் வளாகம் திருவிழா சூழலை பெற்றது.
விழாவின் முதல் நாளில் பின்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, நடிகையும் பாடகியுமான மடோனா செபாஸ்டியன் ஆகியோர் கலந்து கொண்டு இன்னிசை நிகழ்ச்சிகள் வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கருமத்தம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கரிகால் பாரி சங்கர் மற்றும் திரைப்பட நடிகர் ரியோ ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கல்வி, விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள்,பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டப்பட்டனர்.
பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் அனுஷா ரவி பேசுகையில்,
“ஜீரோ ஜி” போன்ற கலாச்சார விழாக்கள் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் சிறந்த தளமாக உள்ளதாக தெரிவித்தார்.மேலும், “ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு தகவல் தொழில்நுட்ப நிபுணர்” என்ற ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்கு எண்ணத்தால் ஈர்க்கப்பட்டு, “பார்க் முன்னாள் மாணவர்களின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு தொழில்முனைவோர் உருவாக வேண்டும்” என்பது தமது கனவு என கூறினார்.
இந்த ஆண்டின் முக்கிய அம்சமாக “நம்பிகை கல்வி உதவித்தொகை” மற்றும் “சக்தி கல்வி உதவித்தொகை” ஆகிய புதிய கல்வி உதவித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
“நம்பிகை கல்வி உதவித்தொகை” என்பது பெற்றோர்களை இழந்தோர் மற்றும் ஆசிரமங்களில் வசிக்கும் மாணவர்கள் உயர்கல்வி தொடர உதவும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டமாகும். “சக்தி கல்வி உதவித்தொகை” மாற்றுத்திறனாளி மாணவர்கள் தரமான உயர்கல்வியை சம வாய்ப்புடன் பெற ஆதரவளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகைகள் ZERO G குழுவும் பார்க் கல்விக் குழுமமும் இணைந்து வழங்குகின்றன.இதில்,நம்பிகை கல்வி உதவித்தொகை – செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர் எம்.ஹரிபிரசாந்த்,
சக்தி கல்வி உதவித்தொகை – கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை முதலாம் ஆண்டு மாணவர் எம்.மதேஹன் ராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
மேலும், DSP சங்கர் தனது புலனாய்வு அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.நடிகர் ரியோ ராஜ்,திரைப்படத் துறையில் தனது பயணத்தை எடுத்துரைத்து, “ஒரே இலக்கில் மட்டும் சிக்கிக் கொள்ளாமல் பல துறைகளை முயற்சி செய்து, உண்மையான ஆர்வத்தை கண்டறிந்து அதனை பின்பற்றுங்கள்” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மாணவர்களின் ஆற்றல்மிக்க கலாச்சார நிகழ்ச்சிகளுடன் “ஜீரோ ஜி 2026” விழா உற்சாகமாக நிறைவடைந்தது.