April 25, 2026
தண்டோரா குழு
இந்திய ஜவுளி இயந்திர உற்பத்தியாளர்களுக்கும், இந்தோனேசிய ஜவுளித் துறைக்கும் இடையே முறையான பேச்சுவார்த்தை தளத்தை உருவாக்கும் நோக்கில், இந்தோனேசியாவிற்கான தனது முதல் ‘ஜவுளி பொறியியல் தொழில் வர்த்தகக் குழுவின்’ பயணம் வெற்றிகரமாக முடிவடைந்ததை இந்தியா ஐடிஎம்இ சொசைட்டி பெருமையுடன் அறிவித்துள்ளது.
இந்த உயர்மட்டக் குழுவில் நூற்புத்துறையில் 6 பேர், நெசவில் ஒருவர், பதப்படுத்துதலில் 6 பேர், சாயம் மற்றும் ரசாயனங்கள் பிரிவில் 2 பேர், கையாளுதல் மற்றும் பேக்கேஜிங் பிரிவில் ஒருவர் 1, சங்கம் மற்றும் சேம்பரில் 2 பேர் என இந்தியாவிலிருந்து மொத்தம் 18 நிறுவனங்கள் மற்றும் 23 பிரதிநிதிகள் வர்த்தக வாய்ப்புகள், தொழில்நுட்ப கூட்டாண்மைகள் மற்றும் நீண்ட கால வணிக கூட்டுறவு ஆகியவற்றை ஆராய்வதற்காக இந்தோனேசியாவில் உள்ள முக்கிய தொழில் மையங்களுக்குச் சென்றனர்.
இந்த குழு கடந்த 12-ந்தேதி முதல் 16 வரை 4 நாட்கள் இந்தோனேசியாவின் 2 முக்கிய ஜவுளி நகரங்களான பண்டுங் மற்றும் ஜகார்த்தாவில் உள்ள தொழில் மையங்களுக்கு சென்றது.இந்தோனேசிய குடியரசின் தொழில் அமைச்சகம், முன்னணி இந்தோனேசிய ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழில் சங்கங்கள் மற்றும் இந்தியா-இந்தோனேசியா வர்த்தக சபை, வர்த்தக மற்றும் தொழில் சபை போன்ற அமைப்புகளை இந்த குழுவினர் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
பண்டுங்கில் உள்ள முன்னணி ஒருங்கிணைந்த ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பிடி. சிபாடெக்ஸ் புத்ரி லெஸ்டாரி நிறுவனத்தையும், 22வது இந்தோ இன்டர்டெக்ஸ் 2026 மற்றும் இனடெக்ஸ் 2026 கண்காட்சிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.முன்னணி இந்தோனேசிய தொழில்துறை தலைவர்கள் மற்றும் ஜவுளி சமூகத்தினருடன் பண்டுங்கில் ஒரு சிறப்பு வணிக கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த அமர்வில் இந்தோனேசிய ஊடகங்களும் பங்கேற்று இந்தியக் குழுவை நேர்காணல் செய்தன. இந்த நேரடி சந்திப்பில் இந்தோனேசியாவுக்கான இந்திய தூதர் சந்தீப் சக்ரவர்த்தி மற்றும் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைவர்களான ஜெம்மி கார்டிவா,டேவிட் லியோனார்டி, வி.கே. அகர்வால்,அனில் திப்ரேவால், கணேஷ் சேதுராமன்,ராகேஷ் மிட்டல், அமித் பைத்,விநாயக் சாண்டில்யா, நரேந்திர கிருஷ்ணா சாண்டில்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்தியா ஐடிஎம்இ சொசைட்டியின் தலைவர் கேதன் சங்வி, “எங்கள் பயணம் இந்தோனேசியா மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆசியான் பகுதிகளுடன் முறையான திட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது” என்றார். சர்வதேச வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இந்திய ஜவுளி இயந்திர உற்பத்தியாளர்களை நம்பகமான உலகளாவிய கூட்டாளர்களாக மாற்றுவது என்ற இந்தியாவின் தொலைநோக்கு பார்வைக்கு இணங்க இந்த முயற்சியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தோனேசியாவுக்கான இந்திய தூதர் சந்தீப் சக்ரவர்த்தி, சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் தொழில்துறை பிரமுகர்களுடன் இந்திய ஜவுளி பொறியியல் தொழில் குழுவினர்.