January 28, 2026
தண்டோரா குழு
கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டியில் ஈஷா அறக்கட்டளையினால் நிறுவப்பட்ட நவீன எரிவாயு மயானத்தின் செயல்பாட்டிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், “எரிவாயு மயானம் முறையான பஞ்சாயத்து அனுமதியுடன், விதிகளுக்கு உட்பட்டே கட்டப்பட்டுள்ளது. சமூகத்திற்குப் பயன்படும் எரிவாயு மயானத்தை பொதுநலனுக்கு எதிரானது எனக் கூற முடியாது” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
ஈஷா யோக மையத்தைச் சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த மக்கள்,அவர்களின் பகுதிக்கு அருகிலேயே ஒரு மயானத்தை அமைத்து தருமாறு அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதன் தொடர்ச்சியாக, ஈஷா அறக்கட்டளை பஞ்சாயத்து அனுமதியுடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட இதர அரசு துறைகளின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நவீன எரிவாயு மயானத்தை அமைத்தது.
இதில் ஈஷாவைச் சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த மயானத்தில் எரியூட்டும் சேவைகளை முற்றிலும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஈஷா அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சில தனிநபர்கள் அவர்களின் சுயலாப நோக்கங்களுக்காக ஈஷா சார்பில் கட்டப்பட்ட எரிவாயு மயானத்திற்கு கிராம பஞ்சாயத்து வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரியும், கட்டிமுடிக்கப்பட்ட மயானத்தை அகற்றக் கோரியும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அடங்கிய அமர்வு, “எரிவாயு மயானம் முறையான பஞ்சாயத்து அனுமதியுடன், விதிகளுக்கு உட்பட்டே கட்டப்பட்டுள்ளது. மேலும் ஒரு மயானம் கட்டப்படுவது அதுவும் எரிவாயு மயானமாக கட்டப்படுவது சமூகத்திற்கு பயன்படும், இதனை பொதுநலனுக்கு எதிரானது என்று கூற முடியாது” எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
சத்குருவின் வழிகாட்டுதலில் அனைத்து மக்களுக்கும் கண்ணியமான இறுதிச் சடங்குகள் மற்றும் எரியூட்டும் சேவைகளை வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் ஈஷா அறக்கட்டளை 2010-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள மயானங்களை இயக்கி பராமரித்து வருகிறது. இதில் சென்னை பெசன்ட் நகர், கோவை, நெய்வேலி, வேலூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முக்கிய மயானங்களும் அடங்கும். குறிப்பாக கோவையில் மட்டும் 13 மயானங்களை ஈஷா பராமரித்து வருகிறது.
இந்த மயானங்களில் அழகான பூங்காவைப் போன்று பசுமையான சூழலை உருவாக்குவதல், மயானத்தை சுற்றி அடர் மரங்களை நட்டு பராமரித்தல், முறையான நடைபாதை வசதிகளை உருவாக்குதல், சுகாதாரமான முறையில் குளியல் மற்றும் கழிவறைகளை பராமரித்தல் மற்றும் அரசின் உதவியோடு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாத வகையில் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் எனப் பல்வேறு பணிகளை ஈஷா மேற்கொண்டு வருகிறது. இதை ஈஷா வணிக நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறது.
மேலும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஈஷா சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு மயானங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் இறுதிச் சடங்குகளை கண்ணியத்துடன் எந்தவித நிதிச்சுமையுமின்றி மேற்கொள்ள உதவும் வகையில் ‘வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை’ வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.