 July 27, 2017
July 27, 2017  tamilsamayam.com
tamilsamayam.com
                                இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின், களமிறங்கிய உடனே உலக சாதனை படைத்து அசத்தினார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலேவில் துவங்கியது.இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
இதில் இந்திய அணிக்காக ஆல் ரவுண்டர் அஷ்வின் பெயர் இடம் பெற்றவுடனே உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்த போட்டி தமிழகத்தின் அஷ்வின் பங்கேற்கும் 50வது டெஸ்ட் போட்டியாகும்.
கடந்த 2011ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான அஷ்வின், இதுவரை 50 டெஸ்டில் பங்கேற்று 275 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் முதல் 50 டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டென்னிஸ் லில்லி முதல் 50 டெஸ்டில், 262 விக்க்கெட்டுகள வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது. இந்நிலையில் இன்று அஷ்வின் பெயர் விளையாடும் லெவனில் அறிவிக்கப்பட்டவுடனே, இந்த உலக சாதனை அஷ்வின் வசமானது.
தவிர, அதிவேகமாக 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையும் டென்னிஸ் லில்லி (56 டெஸ்ட்) வசமே உள்ளது. இதை தகர்க்கவும் அஷ்வினுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு இன்னும் அஷ்வினுக்கு 6 டெஸ்டில் 25 விக்கெட்டுகள் தேவை. இதை எட்டும் பட்சத்தில் இந்த சாதனையும் அஷ்வின் படைக்கலாம்.